அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 3) உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில் 4 பணியிடங்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகவும், மற்ற 14 பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்று, மதிப்பெண் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த பணியிடங்களை நிரப்பும் போது இடஒதுக்கீடு நடைமுறைப் பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கே ஒதுக்கியதாகவும், அதனால் இந்த பணி நியமனத்தை ரத்து செய்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என்று கோரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் இறுதி தீர்ப்பே முக்கியமானது” என கருத்து தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் இன்று (மே 3) இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா வழங்கிய தீர்ப்பில், 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
1983 இல் ராஜீவுடன் அமேதியில் நுழைந்து… இன்று காங்கிரஸ் வேட்பாளர்: யார் இந்த கிஷோரி லால் ஷர்மா?