வெங்கட்பிரபு இயக்கத்தில் 2010ல் கோவா படத்தையும் 2014 ல் கோச்சடையான் அனிமேஷன் படத்தை இயக்கி தயாரித்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இரண்டு படங்களும் படைப்பு ரீதியாகவும், வணிக அடிப்படையிலும் தோல்வியை தழுவிய படங்களாகும். இரண்டு படங்களின் தயாரிப்பினால் பெரும் நஷ்டத்தை ரஜினிகாந்த் குடும்பம் எதிர்கொண்டது.
அதன் பின் கடந்த பத்தாண்டுகளாக திரைப்பட தயாரிப்பு, இயக்கத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். தற்போது
அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக செளந்தர்யா ரஜினிகாந்த் கேங்ஸ் குருதிப்புனல் எனும் இணைய தொடர் ஒன்றை தயாரித்து வருகிறார்.
அமேசான் ப்ரைம் அனுமதித்த பட்ஜெட்டை கடந்து படப்பிடிப்பு செலவுகள் எகிறியுள்ளதால், ’நான் ஏற்கெனவே தயாரித்த கோவா,கோச்சடையான் ஆகியனவற்றினாலேயே பல சிக்கல்களைச் சந்தித்தேன். இப்போது இந்தத் தொடரிலும் இவ்வளவு சிக்கல்கள் வந்துவிட்டனவே’ என்று புலம்பி கொண்டிருக்கிறாராம்.
மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தொடரில் சத்யராஜ், அசோக் செல்வன், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நோவா என்பவர் இயக்குகிறார். 1970களின் பின்னணியில் நடக்கும் இக்கதை இரு குழுக்களுக்கிடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.
இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் படப்பிடிப்பு இதுவரை சுமார் 60% முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற படப்பிடிப்பிற்காக அமேசான் ப்ரைம் நிறுவனம் ஒதுக்கிய மொத்த நிதியும் செலவாகிவிட்டதாம்.
இயக்குநரின் திறமையின்மையே செலவு எகிறக் காரணம் என்பது செளந்தர்யா ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டு.
எனவே, அன்றாடத் திட்டமிடுதல் தொடங்கி எல்லா விசயங்களையும் கண்காணிக்க தொடங்கியுள்ளார் சௌந்தர்யா.
இதனால் இயக்குநர் நோவாவுக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதனால் படப்பிடிப்பு நடத்தாமல் இருக்க முடியாது என்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது. கடந்த சில நாட்கள் வரை புதுச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
அசோக்செல்வன் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு
காலை ஒன்பது மணிக்கே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும் என்று செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இயக்குநர் அதை ஏற்கவில்லை. இரண்டு மணிக்குத்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் அதற்கேற்பத்தான் நான் திட்டமிட்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற செளந்தர்யா ரஜினிகாந்த், “படப்பிடிப்பை நடத்த வேண்டாம். எல்லோரும் கிளம்புங்கள்” என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
இதனால் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை. இந்தச் சண்டையை வெளியில் சொல்லவும் முடியாத நிலை. அன்று படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்றிருந்த நடிகர்கள், ”படப்பிடிப்பு திடீர் ரத்தானது
ஏன்?” என அவர்கள் கேட்டதற்கு, தொடருக்காக அமேசான் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் அதிகச் செலவு ஆகும் நிலை இருக்கிறது.
தொடரை மிகத் தரமாக உருவாக்க வேண்டும் என்று நினைப்பதால் செலவு அதிகமாகிறது. ஆனால் நாங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகை மட்டும்தான் தருவோம், அதிகமானதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமேசான் ப்ரைம் சொல்லிவிட்டது.
எனவே, அமேசானிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிதிநிலையை இறுதி செய்த பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குநருடன் சண்டை, அமேசானிடம் மேற்கொண்டு பணம் வாங்க முடியாத நிலை, இத்தொடருக்காக நடிகர்களிடம் வாங்கிய தேதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியாததால் ஏற்படவிருக்கும் குழப்பங்கள் ஆகிய சிக்கல்களில் தவித்து வரும் செளந்தர்யா ரஜினிகாந்த் பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வரப்போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கிறது அமேசான் ப்ரைம் .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
7.4 சதவிகிதம் உயர்ந்த நிலக்கரி உற்பத்தி!
ஹெல்த் டிப்ஸ்: குறட்டையை விரட்டுவது எப்படி?