டிஜிட்டல் திண்ணை: 20 வருடம் முன்பே ஸ்டாலினுக்கு வந்த ’தேசிய’ அழைப்பு! மோடி கிளறிவிட்ட ஃபிளாஷ் பேக்! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், அமேதி, ரேபரேலி அப்டேட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது, ‘இந்தியா கூட்டணி ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்துக்கு ஒரு பிரதமர்’ என்ற புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி முதல்,ஸ்டாலின் வரை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் மீண்டும் நிலையற்ற தன்மை உண்டாகும்’ என்று பேசினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மத்தியிலும் திமுக தலைமை நிர்வாகிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டபோது… ‘ஸ்டாலினை இப்போது தேசிய அரசியல், சுழற்சி முறை பிரதமர்’ என்றெல்லாம் பேசுகிறார் மோடி. ஆனால், இருபது வருடங்களுக்கு முன் 2004-லேயே தேசிய அரசியலில் முக்கியமான ஆளுமையால் அழைக்கப்பட்டவர் ஸ்டாலின் என்று சில பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

இருபது வருடங்கள் முந்தைய அந்த விவரம் என்னவென்று விசாரித்தபோது சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

முரசொலி மாறன் மறைவுக்குப் பின் 2004 இல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்தது. முரசொலி மாறனின் இடத்தை திமுக சார்பில் யார் டெல்லியில்  நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி டெல்லி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி தனக்கு நெருக்கமான சில டெல்லி திமுக புள்ளிகளிடம், ’ஏன் திமுக தலைவர் கலைஞரின் மகன் ஸ்டாலினை எம்பியாக்கி டெல்லிக்கு அனுப்பக் கூடாது?’ என்று கேட்டிருக்கிறார். பிரணாப் முகர்ஜியின் இந்த கேள்வி ஸ்டாலின் காதுகளுக்கும் அப்போது சென்று சேர்ந்திருக்கிறது.  மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்டாலின், ‘என்னைக் குறிப்பிட்டு பிரணாப் சொன்னாரா?’ என்று ஆச்சரியப்பட்டதோடு, ‘ஒருவேளை எம்பி தேர்தலில் நிற்கலாமா’ என்று கூட தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்தார்.

ஆனால் இதை திமுக தலைவர் கலைஞரிடம் எப்படி எடுத்துச் செல்வது என்ற தயக்கமும் ஸ்டாலினிடம் அப்போது இருந்தது. கலைஞரிடம் சில விஷயங்களை உரிமையாக எடுத்துச் சொல்லும் வகையில் இருந்த பொன்முடி கூட அப்போது இதுபற்றி கலைஞரிடம் பேச தயங்கியிருக்கிறார்.

அதேநேரம்… இன்னொரு பக்கம் முரசொலி மாறன் இடத்தில் டெல்லிக்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பாக ஆலோசனைகளை கலைஞர் நடத்தி வந்தார். அவரது முதல் சாய்ஸ் இப்போதைய முரசொலி ஆசிரியரான முரசொலி செல்வம். அவரை அழைத்து, ‘எம்பியாகி டெல்லிக்கு போறியா?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால், முரசொலி செல்வமோ அதில் விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார்.

அதன் பிறகுதான் முரசொலி மாறனின் மகன் கலாநிதிமாறனை அழைத்த கலைஞர், அவரிடம் டெல்லி அரசியலுக்கு செல்கிறாயா என்று கேட்டுள்ளார். அதற்கு கலாநிதிமாறன், ‘தாத்தா… நான் பிசினஸ்ல தீவிரமா இருக்கேன். எனக்கு சரிப்பட்டு வராது. தம்பி தயாநிதியை அனுப்பலாமே’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் 2004 எம்பி தேர்தலில் முரசொலி மாறனின் மத்திய சென்னை தொகுதியில் அவரது இளைய மகன் தயாநிதி மாறனை நிறுத்தினார் கலைஞர். முழுக்க முழுக்க மாநில அரசியலில் இருந்த ஸ்டாலினை தேசிய அரசியலுக்கான சாய்ஸாக நினைக்கவில்லை கலைஞர்.

இந்த 20 வருடத்துக்கு முந்திய நிகழ்வுகளை மோடியின் பேச்சை ஒட்டி நினைவுகூர்ந்து விவாதித்திருக்கிறார்கள் திமுக தலைவரின் குடும்பத்தினர்.

இப்படி 2004 இலேயே பிரணாப் முகர்ஜியால் தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்தான் ஸ்டாலின். இப்போது இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக விளங்கும் ஸ்டாலின், அடுத்து வரும் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று திமுகவிலேயே எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி 2023 தொடக்கத்திலேயே, ‘ஸ்டாலின் 2024 தேர்தலுக்குப் பிறகு துணைப் பிரதமராக வேண்டும். அதற்காக தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று திட்டமிட்டு தனது ஃபைனான்ஸ் நண்பர்கள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கனா மாநிலங்களில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

இதுபற்றிய தகவலை அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து, ‘செந்தில்பாலாஜியை விட்டு வைத்தால் அவர் ஸ்டாலினை துணைப் பிரதமர் ஆக்கும் வரை ஓயமாட்டார். அந்த அளவுக்கு பாஜகவுக்கு எதிராக தென் மாநிலங்களில் ஒருங்கிணைப்பு முயற்சியைத் தொடங்கிவிட்டார்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகே செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி 2023 ஆகஸ்டு 2 ஆம் தேதி மின்னம்பலத்தில் துணை பிரதமர் ஸ்டாலின்… செந்தில்பாலாஜியின் தென்னிந்திய ஸ்கெட்ச்… மிரண்ட பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில்தான்  சுழற்சி முறை பிரதமர் என்று மோடி இந்தியா கூட்டணி பற்றி பேசியிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் தேசிய அரசியல் என்பது 20 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, இப்போது தீவிரம் அடைந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொடைக்கானல் டூ சென்னை: ஸ்டாலின் ரிட்டர்ன்ஸ்!

கர்ப்பிணி பலி: “இதை செஞ்சிருந்தா ரெண்டு உசுரையும் காப்பாத்திருக்கலாம்” – உறவினர்கள் உருக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *