’பம்பரம் சின்னம்… 2 வாரங்களில் முடிவு வேண்டும்’ : உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

Bamparam symbol Chennai High Court order

பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுக விண்ணப்பம் மீது அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 7) உத்தரவிட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது  வைகோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான்,

“பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஆணையம் பரிசீலிக்கவில்லை” என்று வாதிட்டார்.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ’மனு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

மேலும் அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,

வழக்கின் விசாரணையை மார்ச் 7-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.

அதன்படி இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில்,

”உயர்நீதிமன்ற உத்தரவு படி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மதிமுக அளித்த புதிய மனுவை பரிசீலித்து உரிய  முடிவெடுக்கப்படும்” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு வழங்கிய தீர்ப்பில்,

“பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுக விண்ணப்பம் மீது அடுத்த 2 வாரங்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsENG : சுழலில் சிதறிய இங்கிலாந்து : குல்தீப், அஸ்வின் சாதனை!

ஒலிம்பிக் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share