நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வசூலை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் “இங்க நான் தான் கிங்கு” என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “இந்தியா பாகிஸ்தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் நாராயண் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று (ஏப்ரல் 26) இங்க நான் தான் கிங் படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது.
திருமண ஆசையுடன் பெண் தேடி அலையும் 90ஸ் கிட் ஆக நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
திருமணத்திற்காக ஏங்கும் சந்தானத்திற்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவர் எதிர்பார்க்கும் வகையில் பெண் கிடைத்து திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால், அந்த திருமணத்திற்கு பிறகு மனைவியின் குடும்பத்தினரால் ஏற்படும் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் தீவிரவாத கும்பலுக்கும் சந்தானத்திற்கும் தொடர்பு உள்ளதாக பரவும் செய்தி என பல பிரச்சினைகளை சந்தானம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இந்த பிரச்சனைகள் எல்லாம் ஹீரோ சந்தானம் எப்படி சமாளித்தார் என்பதே இந்த படத்தின் கதை.
இந்த பட டிரைலரின் தொடக்கத்திலேயே நடிகர்கள் விஷாலையும் சிம்புவையும் கலாய்க்கும் வகையில் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார் சந்தானம்.
அதன் பிறகு “இவ்வளவு பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா இதை வீடியோ கவரேஜ் பண்ணி netflix-க்கு வித்து இருக்கலாம்” என்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை ஞாபகப்படுத்தும் வகையில் சந்தானம் பேசும் மற்றொரு வசனமும் சிரிக்க வைக்கிறது.
வழக்கம்போல சந்தானம் ஸ்டைலில் காமெடி கலந்த முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார்.
நடிகர்கள் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் மே பத்தாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் நிச்சயம் வெற்றி திரைப்படமாக அமையும் என்று சந்தானம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூர்யாவுடன் மோதல்… துருவ் விக்ரமுக்கு கதை சொன்ன சுதா கொங்கரா?
சூரியனில் நடந்த தரமான ‘சம்பவம்’!
தமன்னாவின் சிவசக்தி அவதாரம்..! ஒடேலா – 2 வீடியோ இதோ..!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!