நிபா வைரஸ் எதிரொலி: இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

இந்தியா

நிபா வைரஸ் தொற்று காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு கேரள அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொடிய நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டாவதாக உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயது குழந்தை உட்பட நான்கு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கோழிக்கோடு – இரண்டு நாள் விடுமுறை!

இதனையடுத்து கேரள மாநில சுகாதார அமைச்சகம் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கோழிக்கோட்டில் ஒன்பது கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் உள்ள சில அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அதிகாரிகளால் மூடப்பட்டன.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அங்கன்வாடிகள் உட்பட) இன்றும், நாளையும் (செப்டம்பர் 14,15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யவும், விடுமுறையால் பல்கலைக்கழக தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா அறிவித்துள்ளார்.

நிபா வைரஸ் அறிகுறிகள்:

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கொடிய மூளையைச் சேதப்படுத்தும் நிபா வைரஸ் (NiV) ஒரு ஜூனோடிக் வைரஸ். இவை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதர்களிடம் இருந்து நேரடியாகவும் பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை புண் ஆகியவை நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு இருக்கும் ஆரம்ப அறிகுறிகளாகும்.

கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு, மூளைக்காய்ச்சல் மற்றும் வலிப்பு போன்ற தீவிர பிரச்சனைகளையும் உணரலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது!

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கின!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *