மும்பையில் 28,000 சதுர அடி ஆப்பிள் ஸ்டோரை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இன்று (ஏப்ரல் 18) திறந்து வைத்தார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், போனி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோர் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. 28,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஸ்டோரினை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக் திறந்து வைத்தார்.
இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை மற்றும் சேவைகள் ஆகியவை ஒரே இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்டோரின் கட்டிடக்கலையும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.
ஸ்டோரின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் நேற்று இரவே வந்து ஸ்டோரின் முன்னால் காத்து கிடந்த காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின.
கடை திறப்பு விழாவிற்கு பின் டிம் குக் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மும்பையில் உள்ள ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் ஆர்வம் ஆகியவை நம்பமுடியாதவை! இந்தியாவில் எங்கள் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை கடையைத் திறப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கடை திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் அர்மன் மாலிக், நடிகைகள் மாதுரி தீக்ஷித், ரகுல் ப்ரீத் சிங், மெளனி ராய், ஷில்பா ஷெட்டி,
ரவீனா டாண்டன், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவுகள் வலுவிழந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக மாற்றி வருகிறது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் ஆப்பிள் தோன்றி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தனது முதல் ஆப்பிள் ஸ்டோரை இந்தியாவில் திறப்பதன் மூலம் ஒரு பெரிய விரிவாக்கத்தை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் இந்திய சமூகத்தில் ஒரு முக்கிய மைல்கல்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் வரும் 20ம் தேதி தலைநகர் டெல்லியில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா