கர்நாடகா முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் டி.கே.சிவகுமார், சித்தராமையா இருவரும் இன்று(மே 15 )டெல்லி சென்று கட்சி மேலிடத்தை சந்திக்க உள்ளனர்.
முதல்வர் பதவிக்கு கடும் போட்டி
நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
எனினும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடகா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், இத்தேர்தலில் கடுமையாக உழைத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அவர்களுடன் முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோரும் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே, டி.கே.சிவக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் அவர் முதல்வராக வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவின் பக்கம் இருந்து முதல்வர் பதவிக்காக புதிய எம்.எல்.ஏக்களிடையே ஆதரவு கோருவதும் தொடங்கியுள்ளது.
இதனால் முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை அங்கு வெளிப்படையாகவே காண முடிகிறது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், ‘‘எனக்கும் சித்தராமையாவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. அடுத்த முதல்வர் யார் என்பதில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.” என்றார்.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம்
இதனையடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கூடியது.
இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மேலிடப் பார்வையாளர் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திரா சிங், தீபக் பாபரியா, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 135 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சோனியா காந்திக்கு தான் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கடுமையாக உழைத்து அமோக வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாகவும், அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவெடுக்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
”வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், புதிய முதல்வரை அனைவரின் முன்னிலையிலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்று சித்தராமையா கோரியுள்ளார்.
இதனையடுத்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே விடுதிக்கு வெளியே குவிந்த இருவரின் ஆதரவாளர்களும் தங்களின் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்கக்கோரி கோஷம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்திற்கு பின் பேசிய கர்நாடகாவின் ஏஐசிசி பொறுப்பாளராக இருக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கார்கே நீண்ட காலம் எடுக்கமாட்டார் என்றும், கர்நாடகாவின் அடுத்த முதல்வரின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் ஆலோசனை நடத்துவதற்காக மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லி சென்றார்.
டெல்லிக்கு அழைப்பு!
இந்நிலையில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை டெல்லிக்கு வருமாறும் காங்கிரஸ் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று டெல்லி செல்லும் இருவரும் சோனியா காந்தி , ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேச உள்ளனர்.
அதன் முடிவில் முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்து அறிவித்த பிறகு, புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவுக்கு திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கும் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடகாவில் களேபரம்: நள்ளிரவில் கைமாறிய காங்கிரஸின் வெற்றி!