Misleading Ads of Patanjali

பதஞ்சலி விளம்பரங்கள்: அரசு கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? – உச்சநீதிமன்றம்

இந்தியா

பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் தொடர்பான வழக்கு நேற்று (பிப்ரவரி 27) விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், “பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன விளம்பரங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் மீது தவறான தகவல்களைப் பரப்பும் அனைத்துவித மின்னணு, அச்சு ஊடக விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ (IMA) தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக ஐஎம்ஏ குற்றஞ்சாட்டியது.

நவீன மருத்துவமான அலோபதிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,

பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக அரசாங்கத்தைக் கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் மீது தவறான தகவல்களைப் பரப்பும் அனைத்துவித மின்னணு, அச்சு ஊடக விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத வழக்கை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம்,

“யோகா குரு பாபா ராம்தேவுக்கு என்னவாயிற்று? அவர் யோகா கலையை பிரபலப்படுத்தியதால் அவர் மீது மரியாதை கொண்டோம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிப்பது தவறு.

அவருடைய நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என்று அப்போது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து

ஓ.. இதான் அந்த பழிக்கு பழியா? : அப்டேட் குமாரு

இமாச்சல் : மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி!

மாநிலங்களவை தேர்தல் : மாறிய ஒத்த ஓட்டு… கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி!!

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *