மாநிலங்களவை தேர்தல் : மாறிய ஒத்த ஓட்டு… கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி!!

Published On:

| By christopher

Congress Wins 3 Seats In Karnataka

கர்நாடகாவில் இன்று (பிப்ரவரி 2024) நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிட்ட 3 காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 மாநிலங்களவை எம்.பி.களுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அது முடிவுற்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

கர்நாடகாவில் 4 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேரையும், பா.ஜனதா தலைமையில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம்.

காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோரும், பாஜக சார்பில் அக்கட்சியை சேர்ந்த  நாராயண்சா கே.பண்டேகே மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனர்.

இதில் பாஜக வேட்பாளர் நாராயண்சா 45 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். மற்றொரு வேட்பாளாரான குபேந்திர ரெட்டி வெற்றி பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற ஒரு வாக்கு தேவைப்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார்.

இதனால் காங்கிரஸை சேர்ந்த அஜய் மாக்கன் 47 வாக்குகளும், சையத் நசீர் ஹுசைன் 46 வாக்குகளும் மற்றும் ஜிசி சந்திரசேகர் 46 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

இதனால் மதசார்பற்ற ஜனதா கட்சியின் வேட்பாளர் குபேந்திர ரெட்டியின் தோல்வி உறுதியானது.

போட்டியிட்ட 3 காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் வாக்களித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பாலாறு குறுக்கே புதிய அணை : தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

மீண்டும் ‘கேப்டனாக’ களமிறங்கிய ஹர்திக் பாண்டியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share