”இனி, நான் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது” என பிகினி கில்லரான சார்லஸ் சோப்ராஜ் தெரிவித்துள்ளார்.
1970களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தொடர் கொலைகளை அரங்கேற்றி உலகையே அதிர்ச்சிக்குள் வைத்திருந்தவர் பிகினி கில்லரான சார்லஸ் சோப்ராஜ். இளம்பெண்களை குறிவைத்து கொலை செய்து வந்த சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 பேர் இருக்கும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது மற்றும் பிரான்சை சேர்ந்தவருக்கு விஷம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவிலும் சிறை வாசத்தை அனுபவித்தவர் சோப்ராஜ்.
நேபாளத்தில் கடந்த 1975ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சோப்ராஜ், கடந்த 2003ஆம் ஆண்டு அந்த நாட்டு காவல் துறையில் சிக்கினார். இதில் ஆயுள் தண்டனை பெற்று காட்மாண்டு மத்திய சிறையில் சோப்ராஜ் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தண்டனைக் காலம் முடியும் நிலையில், சோப்ராஜின் உடல்நிலை, முதுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, நேபாள உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அத்துடன் 15 நாட்களுக்குள் பிரான்ஸுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 23) அவர் காட்மாண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் அவர் உடனடியாக பிரான்சுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த சோப்ராஜ் ஏஎஃப்பி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தற்போது நான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறேன். இனி, நான் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது.
நேபாள அரசு உட்பட பலரது மீதும் வழக்கு தொடுக்க இருக்கிறேன். நான் நேபாளத்திற்கு வந்ததுகூட இல்லை. ஆனால், என்னைக் கொலைகாரன் என்று கூறி இத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க வைத்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ஜே.இ.இ தேர்வு: தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!