முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ததுபோல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என ஷ்ரத்தானந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் முரளி மனோகர் மிஸ்ரா. ஷ்ரத்தானந்தா என்ற பெயருடன் சாமியாராக வலம் வந்த இவர்,
முன்னாள் மைசூரூ திவானின் பேத்தியான ஷகீரா நமாசியை கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் 1991ஆம் ஆண்டு ஷகீராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பங்களாவில் உயிருடன் புதைத்துக் கொன்றதாக ஷ்ரத்தானந்தா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஷகீராவின் மகள் கொடுத்த புகாரின் பேரில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தானந்தாவுக்கு முதலில், விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர் உயர் நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து, அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது.
இவர்களுடைய விடுதலைக்கு நாட்டில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்துவரும் நிலையில், அவர்களைப்போல், தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என ஷ்ரத்தானந்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “எனக்கு எந்தவித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனக்கு ஒரு நாள்கூட இதுவரை பரோல் வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றவாளிகள் பலமுறை பரோலில் வெளியே சென்றுவந்ததுடன், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனது விஷயத்தில் தனிமனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. எனவே, ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ததுபோல, என்னையும் விடுதலை செய்ய வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
பிடிஆரின் ஆங்கில வார்த்தை: விளக்கத்தை ஏற்க மறுத்த ஐ.பி.
தெலங்கானா குதிரை பேரம்: சிக்குகிறாரா பாஜக தேசிய பொதுச்செயலாளர்?