மதுரையில் நவம்பர் 17 ஆம் தேதி நடந்த கூட்டுறவு வார விழாவில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறை பற்றி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
பிடிஆருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் காரசாரமாக பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட மக்கள் தொடர்புத் துறை (பி.ஆர்.ஓ.) அலுவலகத்தில் இருந்து நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பினரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
“அமைச்சர் பேசிய பேச்சு தவறாக பத்திரிகைகளால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் பிடிஆர் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவிக்கவில்லை.
அவர் பேச்சில், கூட்டுறவுத் துறையின் aggregate value grows இல் நிதியமைச்சராக எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
aggregate value grows என்பது தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களின் ஒட்டுமொத்த மதிப்பீடாகும். புள்ளி விவர அடிப்படையில் இந்த மதிப்பீட்டில் நிதியமைச்சராக பிடிஆர் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை என்று அவர் சொல்ல வந்திருக்கிறார்.
கூட்டுறவுத் துறையின் ஒட்டுமொத்த மதிப்பீடு வேறு, அதன் செயல்பாடு வேறு. ஆனால் ஊடகங்களில் தவறாக செய்திகள் வந்துவிட்டன’ என்று மதுரை பிஆர்ஓ தரப்பில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் தரப்பிற்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.
இது அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரோ, ‘திருப்தி இல்லைங்குறாரு.
மொபைல் ரேஷன் கடைகள் பத்தி குறை சொல்றாரு…இந்த வார்த்தை விளையாட்டல்லாம் வேணாம்’ என்று தகவல் சொன்னவர்களிடம் தனது அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார்கள் திண்டுக்கல் திமுக வட்டாரத்தில்.
–வேந்தன்
திகார் வீடியோ: மணிஷ் சிசோடியா விளக்கம்!
இரட்டை இலை இல்லை என்றால் பழனிசாமி இல்லை: தினகரன்