தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பேர வழக்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆஜராக சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ-க்கள் பைலட் ரோகித் ரெட்டி, குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரை பாஜகவுக்கு அணி தாவ ரூ.100 கோடி பேரம் பேசிய வழக்கில் சதீஷ் ஷர்மா, சிம்ஹாஜி, ஆனந்த் குமார் ஆகிய மூவரை சைபராபாத் காவல்துறை கைது செய்தது.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ-க்கள் பேர வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷுக்கு நவம்பர் 21-ஆம் தேதி காவல்துறையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41 ஏ பிரிவின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நவம்பர் 21-ஆம் தேதியில் சந்தோஷ் சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகத் தவறினால் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பி.எல்.சந்தோஷூக்கு சிறப்பு புலாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தெலங்கானா பாஜக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமாந்தர் ரெட்டி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் பேர வழக்கில் சிஆர்பிசியின் 41-வது பிரிவின் கீழ் பாஜக தலைவர் சந்தோஷை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு அழைப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. பி.எல் சந்தோஷுக்கு வழங்கப்பட்ட நோட்டீசிற்கு தடை வழங்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்பில்லாதவர்களை விசாரணை என்ற பெயரில் சிறப்பு புலனாய்வுக் குழு துன்புறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்