இந்திய ராணுவம், “அதிகாரிகளிடையே குறைந்து வரும் உடல் தரத்தை” கருத்தில் கொண்டு புதிய உடற்பயிற்சி கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் “அதிகாரிகள் மத்தியில் குறைந்து வரும் உடல் தகுதி” (ஃபிட்னஸ்) மற்றும் “வாழ்க்கைமுறை நோய்களின் அதிகரிப்பு” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ராணுவத்தில் உள்ள வெவ்வேறு வயதினருக்கான உடல் தரநிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
28 வயது முதல் 48 வயது வரை மற்றும் அதற்கு மேலான வயதுடைய ராணுவ அதிகாரிகளுக்குக் குறைந்த பட்ச எடையளவு, அதிகபட்ச எடையளவு நிர்ணயிட்டப்பட்டுள்ளன.
புதிய கொள்கையின்படி, அதிகாரிகள் காலாண்டு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்.
இதில், BPET எனப்படும் போர் உடல் திறன் தேர்வில் தனிநபர்கள் 5 கிமீ ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம் (ஸ்பிரிண்ட்), செங்குத்தான கயிற்றில் ஏறுதல், கிடைமட்ட கயிற்றில் ஏறுதல், 9 அடி பள்ளத்தை வயது அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கடந்து செல்லுதல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
PPT எனப்படும் உடல் திறன் தேர்வில் 2.4 கிமீ ஓட்டம், 5 மீ ஷட்டில், புஷ்-அப், சிட்-அப், 100 மீட்டர் ஸ்பிண்ட் ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தேர்வுகளின் முடிவுகள் வருடாந்திர ரகசிய அறிக்கையில் இடம் பெறும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி, அதிக எடை கொண்ட ராணுவ அதிகாரிகளின் உடல் தகுதியில் 30 நாட்களுக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், ராணுவ ஒழுங்குமுறை (AR) 15 மற்றும் ராணுவச் சட்டம் (AA) 22 ஆகியவற்றின் கீழ் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா