அமலாக்கத் துறை இயக்குநரின் பதவி காலத்தை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநராக எஸ். கே. மிஸ்ரா 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவரது பதவிகாலம் முடிந்த பின்னும் மூன்று முறை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.
மிஸ்ராவின் பணி நீட்டிப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஜூலை 11 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் மிஸ்ராவின் பணி நீட்டிப்பு செல்லாது என்று உத்தரவிட்டது.
ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே மிஸ்ரா பணியில் நீடிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்துக்குள் புதிய இயக்குநரை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று புதிய மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பி. ஆர். கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் அமர்வில் இந்த வழக்கு விசாராணைக்கு வந்த போது, “மிஸ்ராவை தவிர அமலாக்கத் துறையில் திறமையானவர்கள் இல்லையா?” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் சர்வதேச கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதனால் தான் பணி நீட்டிப்பு கேட்கிறோம்” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் சர்வதேச கூட்டத்தை பணி நீட்டிப்புக்கு ஒரு காரணமாக சொல்வதா? இந்த கூட்டத்தின் நடைமுறை 2024 வரை தொடரும்.
ஆனால் இவர்கள் அக்டோபர் 2023 வரை மட்டும் பணி நீட்டிப்பு கேட்கிறார்கள். 140 கோடி மக்கள் இவரை நம்பித்தான் இருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதை விசாரித்த நீதிபதிகள், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட்டனர்.
பொது நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள்,
“செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரேனும் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு கூட ஏற்க மாட்டோம்” எனவும் குறிப்பிட்டனர்.
பிரியா
தனுஷின் கேப்டன் மில்லர் : புதிய போஸ்டர் வெளியீடு!
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஆகஸ்ட் 1-க்கு ஒத்திவைப்பு!