விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைமையில் 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மத்திய அரசு எதிர்க்கட்சிகளை நசுக்குவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
அதபோன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து இருந்தன. அதில், ”பாஜகவுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளை ஒடுக்குவதையும் அவர்களைச் செயல்பட விடாமல் தடுப்பதற்காகவும் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது.
95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்தே போடப்பட்டிருக்கின்றன.
கைது நடவடிக்கையின் போது சரியான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
திமுக, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா சமாஜ்வாதி கட்சி, பி.ஆர்.எஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 14 கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி டிஓய். சந்திர சூட் மற்றும் நீதிபதி பரிதிவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விசாரணை தண்டனையிலிருந்து எதிர்க்கட்சிகளுக்கு விலக்கு கேட்கிறீர்களா?. சாமானியர்களைத் தாண்டி அரசியல் கட்சியினருக்கு என தனிச் சிறப்பான உரிமைகள் ஏதேனும் இருக்கிறதா?என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சிங்வி, மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்கிறது.
இது ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானது புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வரும் 121 அரசியல்வாதிகளின் வழக்குகளில் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகளுடையது” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள், “இந்த மனு பிரத்தியேகமாக அரசியல்வாதிகளுக்கானது போல் உள்ளது. அரசியல் வாதிகளுக்கு மட்டும் எப்படி தனிப்பட்ட நெறிமுறைகளை உருவாக்க முடியும். எதிர்க்கட்சியினரும் குடிமகன்கள் தானே? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இந்த மனுவை விசாரிப்பதில் உச்ச நீதிமன்றம் தயக்கம் காட்டுவதைக் கவனத்தில் கொண்டு, மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் சிங்வி கூறினார்.
இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
பிரியா