விபத்தில் ஹாட்ரிக் அடித்த ’வந்தே பாரத்’ ரயில்!

இந்தியா

வந்தே பாரத் ரயில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது பேசுபொருளாகி இருக்கிறது.

நாட்டின் 75 ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு (2023) ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.

முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஏற்கெனவே டெல்லி-வாரணாசி, டெல்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3வது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கிவைத்தாா்.

vande bharat train hattrick accident

குஜராத் – மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட அந்த ரயில், கடந்த அக்டோபர் 6ம் தேதி எருமை மாடுகளால் விபத்துக்குள்ளானது. இதில் 4 எருமை மாடுகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது.

எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 7) மாலை பசுமாடு ஒன்று அதே ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. அதேநேரத்தில் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் ரயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

ஆனால், இன்று (அக்டோபர் 8) காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து வாரணாசி இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது.

அந்த ரயிலின் C8 பெட்டியின் சக்கரம் பழுதடைந்ததால், ரயில் நகர்வதில் பிரச்சனை ஏற்பட்டது.

vande bharat train hattrick accident

டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில், உத்தரப்பிரதேசத்தின் டான்கவுர் மற்றும் வைர் நிலையங்களுக்கு இடையே பழுதாகி நின்றது.

இந்த ஜாம் பிரச்சினையால் பயணிகள் 5 மணி நேரம் தவித்தனர். பின்னர், பயணிகள் வேறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நல்லவேளையாக, பணியிலிருந்த ஊழியர் சக்கரம் ஜாம் ஆகியிருப்பதைக் கவனித்ததால், பாதி வழியில் ரயில் இயக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது.

ஒருவேளை சக்கரங்கள் ஜாம் ஆகியிருப்பது கவனிக்கப்படாமல் மணிக்கு 100 கிலோ மீட்டர் (மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடியது வந்தே பாரத் ரயில்) வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பின்னர், வட மத்திய ரயில்வேயைச் சேர்ந்த குழுவின் உதவியுடன் பழுது சீர்செய்யப்பட்டு, குர்ஜா ரயில் நிலையத்துக்கு மணிக்கு 20 கி.மீ வேகத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

பழுது குறித்த முழுமையான விவரம், ரயில் பெட்டி பராமரிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதித்த பின்னர்தான் தெரிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

சட்டமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிமுக? எடப்பாடி ஆலோசனை!

அமெரிக்காவில் இருந்து ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *