செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 27) இரண்டாவது நாளாக நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி,
“அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் அல்ல. அவர்கள் அப்படி கருதப்பட்டால் போலீஸ் அதிகாரியின் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். இது பிஎம்எல்ஏ சட்ட விதிகளுக்கு முரணானது. கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையில் ஆஜர்படுத்த மட்டுமே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்ய அதிகாரமில்லை. பெரா வழக்குகளில் அமலாக்கத்துறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதில்லை.
பிஎம்எல்ஏ சட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகின்றனர். அது தான் பிரச்சனையாக உள்ளது” என்று வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இதுவரை 300 பேரை கூட கைது செய்யவில்லை. தவறுதலாக ஒருவரை கைது செய்தால் கூட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படுகிறது.
எதிர்தரப்பு அரசியல் வாதங்கள் செய்யாமல் சட்டத்தின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக்கு பின் கைது செய்ய சட்டப்பிரிவு 19-ன் கீழ் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” என்று வாதத்தை முன்வைத்தார்.
இன்று தனது தரப்பு வாதத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாததால் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீண்டும் வாதத்தை தொடர கபில் சிபல் அனுமதி கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
வயதான யானையா, பட்டத்து யானையா?: செல்லூர் ராஜூ- தங்கம் தென்னரசு மோதல்!
“விசாரணையின் போது கைது செய்ய ED-க்கு அதிகாரமில்லை” – கபில் சிபல் வாதம்!