Elderly women treated like these in India

நாய் கஞ்சி: வயதானவர்களின் சொல்ல மறந்த கதைகள்… என்று மாறும் இந்த அவலம்? Data Story

சிறப்புக் கட்டுரை

நா.மணி Elderly women treated like these in India

அந்த பாட்டி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் முதலில் சந்திக்கும் மனிதர் அவர் தான். “தம்பி! நல்லா இருக்கீங்களா?” என்று கேட்ட மறுநிமிடம், “நானெல்லாம் உசுரோட இருந்து, என்ன பண்ண போறேன்? எனக்கு ஒரு சாவு வரலையே” என அழத்தொடங்கி விடுவார். யாரேனும் சிறு வயதில் இறந்து அதற்கு துக்கம் விசாரிக்க ஊருக்கு சென்றால், “சின்னஞ்சிறுசுகள் எல்லாம் போயிருச்சு எனக்கு ஒரு சாவு வரலையே” என்பார்.

எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பாட்டி இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். இறக்கும் வரை அவருக்கு மூன்று வேளை என முறை வைத்து மகன்கள் சாப்பாடு கொடுத்து வந்தார்கள். ‌மூன்று பேரும் ஆளுக்கு 10 நாள், என‌ பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதாக அவர்களுக்குள் ஒப்பந்தம்.

மறந்து போய் ஒரு நாள் சேர்த்து இந்த வீட்டில் இருந்து விட்டாலோ, அல்லது ஒரு நாளைக்கு முன்பே இன்னொரு மகன் வீட்டுக்கு சென்று விட்டாலோ அந்த பாட்டி வாங்கி கட்டிக் கொள்ளும் வார்த்தைகள் அவருக்கு இழைக்கப்படும் அவமானங்கள் அப்பப்பா பார்க்கும் நமக்கே நெஞ்சு வெடித்து விடும். மேலே சொன்ன இருவரும் ஏழைகள்.

அதற்கு நேர்மாறாக ஏழையாக பிறந்து தன்னுடைய உழைப்பால் 100 ஏக்கர் நிலம் சேர்த்தவர் அவர். ஊரே அவரது வரலாற்றை ஒற்றை வரி கதையாக சொல்லிக் கொண்டாடிக் கொண்டிருந்தது. “எப்போதும் ராகி களியை, அதுவும் கரைச்சு தான் குடிப்பார். கையை விட்டு கரைச்சா, கையில களி ஒட்டாது. அப்படி சாப்பிட்டு தான் பாடுபட்டு, இத்தனை ஏக்கர் நிலத்தை சேர்த்தார்”, என்று சொல்வார்கள்.

நூறு ஏக்கர் நிலத்தை சம்பாதித்த மனிதர், அந்த வீட்டில் தன்னுடைய இறுதி காலம் வரை நாய் கட்டி இருக்கும் இடத்தில் தான் ஒரு ஓலை சாலையில், தங்க வைக்கப்பட்டு இருந்தார். நாய்க்கு ஊத்தும் சோறு. அதற்கு பெயரே ‘நாய் கஞ்சி’ தான். அதுதான் அவருக்கும் கடைசி வரை கிடைத்தது. மேலே சொன்ன சம்பவங்கள் எல்லாம் நான் எங்கள் கிராமத்தில் பார்த்தவை.

ஊர், உலகம் முழுவதும் நமது முதியவர்கள் எப்படி நடத்தப்பட்டனர்? எப்படி வாழ்ந்தார்கள்? என்று எண்ணி பாருங்கள். வயது முதிர்ந்தவர்களின் பிரச்சனைகள், கிராமம், நகரம், பாலினம், வருமானம் என எல்லாவற்றையும் சார்ந்தது. ஒவ்வொன்றின் தன்மைக்கு ஏற்ப முதுமையும், பிரச்சனைகளும், அதனை எதிர்கொள்ளும் தன்மையும் மாறுபடும். அவ்வளவே.

மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள்

முன் காலத்தில் வயதானவர்கள் எண்ணிக்கை குறைவு. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 24 வயது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, அது 35 ஆக அதிகரித்தது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து மனிதர்களின் சராசரி வாழ்நாள் இன்று 70 வயதை கடந்திருக்கிறது. தற்போது சராசரி வாழ்நாள் அதிகம். வயது மூப்பு எய்தியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம் என ஏதோ ஒரு மாதாந்திர நிதி இருப்பவர்களின் பிரச்சினை தனி. இவர்கள் மற்ற பெரியவர்களை காட்டிலும் உணவு,மருந்து, இதர செலவுக்கு திண்டாட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இதர பெரியவர்களில் பலர் உயிர் வாழ்தல் நிமித்தம் பெறும் மன உளைச்சல், அவமானம், சுயமரியாதை இழப்புகள் ஆகியவற்றை சொல்லி மாளாது.

காலம் தாழ்ந்த உலகளாவிய முயற்சிகள்

வயது முதிர்ந்தோர் துயரம் உலகின் பெருந்துயரங்களில் ஒன்று. இது நாட்டுக்கு நாடு, அந்நாடுகளின் வருவாய் நிலைகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், அம்மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

ஆனால் துயரம் என்னவோ ஒன்று தான்.ஒவ்வொரு மனிதனும் உழைத்து, ஓடாய் தேய்ந்து, மனமும், உடலும் உடைந்து எந்த ஆதரவும் இன்றி மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களின் துயரங்களை தடுக்க, உலகில் ஒருங்கிணைந்த முயற்சிகள் நீண்ட நெடுங்காலமாக மேற்கொள்ளப்படவில்லை.

சமீபகாலமாகவே இம்முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1982-ம் ஆண்டில் தான் இதற்கான முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது. உலக நாடுகள் வியன்னாவில் கூடி இது பற்றி விவாதித்தன. ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய முன்னெடுப்பை எடுக்க ஊக்குவித்தது. இதன் அடிப்படையில், உலகளாவிய அளவில் முதியோருக்கான ஒரு கொள்கை வரைவு, 1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

சுதந்திரமாக வாழ்தல், பங்கேற்போடு கூடிய வாழ்வு, கௌரவத்தோடு இணைந்த வாழ்க்கை, சுய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வாழ்தல் ஆகியவை முதியவர்களுக்கு உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய முதியோர் மீதான அறிக்கை 2023-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.

அதிகரிக்கும் மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் எனப்படுபவர்கள் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கையை குறிக்கிறது. 2022-ம் ஆண்டின் கணக்குப்படி உலக மக்கள் தொகையில் சுமார் 110 கோடி பேர் இந்த வயது வரையறைக்குள் வருகின்றனர். தற்போதைய உலக மக்கள் தொகையில் 13.9% முதியோர்களின் எண்ணிக்கையாக உள்ளது.

2050-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மூத்த குடிமக்களாக முதியவர்களாக இருப்பார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கணக்கை ஆசிய அளவில் மட்டும் கணக்கீடு செய்து பார்த்தால் அது மிகவும் அதிகம். உலக மூத்த குடிமக்கள் எண்ணிக்கையில் 58% பேர் ஆசியாவில் வாழ்கின்றனர். ஆசிய‌ நிலைமைகளை போன்று தான் இந்திய நிலைமைகளும். இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 கோடி பேர் மூத்த குடிமக்கள். மொத்த இந்திய மக்கள் தொகையில் இது 10.5% ஆகும். 2050 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை, இந்தியாவில் 34.7 கோடியாக அதிகரித்து விடும்.

எதிர்கால மதிப்பீடுகள்

150 முதல் 200 ஆண்டுகளை கடந்தால் வளர்ந்த நாடுகளில் உழைப்போர் எண்ணிக்கையை காட்டிலும், உழைக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை அதாவது மூத்த குடிமக்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிவிடும். இந்த வளர்ச்சி வேகத்தை சில வளர்ந்து வரும் நாடுகள் ஐம்பதே ஆண்டுகளில் எட்டிவிடும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

இவை அதிர்ச்சிகரமாக இருந்தாலும் சமூக வளர்ச்சிப்படி நிலையின் ஒரு பகுதியே என்பதை நாம் உணர வேண்டும். இந்த இயல்பான வளர்ச்சி போக்கு ஏன் சிக்கலாக மாறுகிறது? என்று பார்த்தால் நாம் தான் இந்த பிரச்சனையை சரியாக கையாளாமல் பொறுப்பற்று இருக்கிறோம். இங்கு நாம் என்று சொல்வது மக்கள், சமூகம், அரசு என எல்லாவற்றையும் சேர்த்தே. என்றாலும் அரசுக்கு இந்த விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

மூத்த குடிமக்களில் பெண்களின் விகிதம்

நாட்டுக்கு நாடு மூத்த குடிமக்களின் பிரச்சனைகள் வேறுபடுகிறது. அதில் இந்திய நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்பதை காண்போம். இந்திய வயோதிகம் என்பது பெண்ணியம் சார்ந்ததாகவும், கிராமப்புறம் சார்ந்ததாகவும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 60 வயது கடந்து வாழ்பவர்களின் சராசரியை தனியாக கணக்கெடுத்து பார்த்தால், அவர்களின் வாழ்நாள் சராசரியாக 18.3 வருடங்கள் அதிகம். அதாவது 78.3 வருடங்கள். இதிலும் கூட யார் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்ற பகுப்பாய்வு இருக்கிறது.

ஆண்கள் Vs பெண்கள் Elderly women treated like these in India

60 வயது கடந்து சராசரியாக ஆண்கள் 17.5 வருடங்களும் பெண்கள் 19 வருடங்களும் வாழ்கின்றனர். ஒட்டுமொத்த இந்திய நிலைமைகள் இவ்வாறு இருக்க, மாநிலத்திற்கு மாநிலம் இந்த நிலைமைகள் வேறுபடுகிறது. அதிகபட்சமாக இந்திய சராசரி ஆயுட்காலத்தை கொண்டிருப்பவர்கள் காஷ்மீரத்து பெண்கள்.

இவர்கள் 60 வயதுக்கு பிறகு சராசரியாக 23 வருடங்கள் வாழ்கிறார்கள். அதாவது 83 வயது வரை வாழ்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இமாச்சலப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளமும் இருக்கிறது. அதேசமயம் பீகார், ஜார்கண்ட் ,அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிள் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.

பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருக்கும் மாநிலங்கள் அனைத்தும் ஒன்று போல் இல்லை என்பதையும் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் உத்திர பிரதேசமும், பஞ்சாப்பும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருப்பவை அல்ல. என்றாலும் அம்மாநிலங்களில் வாழும் பெண்களின்சராசரி வாழ்நாள் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களில் ஆண், பெண் விகிதாச்சாரம்

1991-ம் ஆண்டு முதல் வயது முதிர்ந்த பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்தாண்டிற்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1991-ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு, 943 பெண்கள் என்றிருந்த நிலைமாறி, 2011-ல் 1000 ஆண்களுக்கு, 1033 பெண்கள் என உள்ளது. அதன்படி பார்த்தால் ஆண்களை காட்டிலும் பெண்களின் பாலின விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது. இது 2031-ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு, 1075 பெண்கள் என மேலும் அதிகரிக்க கூடும் என மக்கள் தொகையியலார்கள் கூறுகின்றனர்.

வயது மூப்படைந்தவர்களில் ஆண், பெண் என இரு பாலர்களும் சிக்கல்களை சந்தித்தாலும் இதில் பெண்களே அதிக சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக வயது மூப்பு அடைந்தவர்கள் என்பதையும் தாண்டி மிகவும் நலிவடைந்த‌ நிலையில் வாழ்பவர்களாகவும் பெண்களே உள்ளனர்.

Elderly women treated like these in India

வாழ்வதற்கான ஏற்பாடு, பொருளாதார நிலை, வருமானம், உடல் ஆரோக்கியம், சத்தான உணவு, உடல் ஊனம் அடைதல், நடமாட்டம் இன்மை, மன ஆரோக்கியம் போன்ற அனைத்து விஷயங்களிலும் வயது முதிர்ந்த ஆண்களைவிட பெண்களே அதிக சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இனிவரும் காலங்களிலும் அதிக காலம் வாழ்தல், வயது மூப்பு ஆகிய விஷயங்களை வைத்து பார்த்தால் பெண்களே நீண்ட நாட்கள் வாழ போகிறார்கள். இதனால் அவர்கள் மேலும் பல சிரமங்களை சந்திக்க கூடும் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக வயது வாழும் பெண்கள் எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்க இருக்கிறது. தென்னகத்தில் வாழ்வோருக்கு இது மதிப்புமிக்க செய்தி என்றாலும் மகிழ்வான செய்தி அல்ல.

நீடித்து வாழும் பெண்களின் துயரங்கள்

பெண்களுக்கு அடுத்ததாக இதில் கூடுதல் சிரமங்களை சந்திக்க இருப்பவர்கள் கிராமப்புற மக்கள். நகர்ப்புற முதியோர்களை காட்டிலும் கிராமப்புற முதியோர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள். கிராமப்புறங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் 60 வயது தாண்டியவர்கள் உள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

ஒரு கட்டத்தில் 60 வயது முதல் 80 வயது வரை உள்ள மக்கள் தொகை இதர வயது மக்கள் தொகையை காட்டிலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என மக்கள் தொகை இயல் ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இந்த நிலையை, “முதுமையின் முதுமை காலம்” என வரையறை செய்கின்றனர். 2000-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 22 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகை 34 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆனால் அதே சமயம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 103 விழுக்காடும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 128 விழுக்காடும் அதிகரித்துள்ளனர். 2022 முதல் 2050 வரையிலான இந்த காலகட்டத்தில், மக்கள் தொகை வளர்ச்சி 18 விழுக்காடாக வீழ்ச்சி அடைய உள்ளது. அதேசமயம் 80 வயது மூப்படைந்தவர்கள் எண்ணிக்கை 279 விழுக்காடு அதிகரிக்க இருக்கிறது. வயது முதிர்ந்த பெண்களே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். எனினும், அதில் பெரும்பான்மையானவர்கள் விதவைகளாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Elderly women treated like these in India

ஓய்வூதியம்

60 வயது முதிர்ந்தவர்களில் வேலைக்கு சென்று வரும் நிலையில் உள்ள ஆண்கள் 50 விழுக்காடு. ஆனால் பெண்கள் எண்ணிக்கை 22 விழுக்காடு மட்டுமே. ஏன் இந்த வேறுபாடு? ஒப்பீட்டளவில் பெண்களே அதிக எண்ணிக்கையில் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர். உணவு, வேலை, திருமணம், பராமரிப்பு ஆகியவை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மிகக்குறைவு.

இவையெல்லாம் சேர்ந்து பெண்களை 60 வயதுக்கு பிறகு வருமானம் ஈட்டும் உடல் திறனோடு வைத்திருப்பதில்லை. முதுமையிலும் அதிக ஓய்வு ஊதியம் பெறுவோர் ஆண்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 விழுக்காடு ஆண்கள் ஓய்வு ஊதியம் பெறுகின்றனர். அதே நேரம் பெண்களில் 1.7 விழுக்காடு மட்டுமே ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் நிலையில் அதிக எண்ணிக்கையில் பெண்களே இருக்கின்றனர்.

உதவித்தொகை Elderly women treated like these in India

முதியோர் உதவித்தொகை பெறும் ஆண்கள் 16.3 விழுக்காடு. பெண்கள் எண்ணிக்கை 27.4 விழுக்காடு. மனிதர்கள் வாழும் போது நல்ல திட்டங்களை அமலாக்கம் செய்து, சமூகப் பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய அரசுகள் எடுக்கும் முயற்சிகளை காட்டிலும் வயது முதிர்ந்து உதிரும் தருவாயில் அல்லல்படும் மனிதர்களுக்கு சிறப்பு திட்டங்கள் உருவாக்கி அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்று.  மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், இந்த பிரச்சனை மேலும், மேலும் முற்றிக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப அரசு புதிய திட்டங்களை உருவாக்குதல் அவசியம். திட்டங்களை உருவாக்குவதை விடவும் செயல்படுத்துவது அதனை விட முக்கியம். இவை அனைத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

அது என்னவென்றால் அரசின் பாதுகாப்பு திட்டங்களை தாண்டி இந்த பிரச்சனையை புரிந்து கொள்ளும், அரவணைத்து செல்லும் இளைய தலைமுறையை உருவாக்குவது. எல்லாவற்றையும் விட மூத்த குடிமக்களை ஒரு தோழனை போல அரவணைத்து செல்லும் மனங்களை கட்டமைப்பது அத்தியாவசியம்.

Elderly women treated like these in India by n mani

கட்டுரையாளர்: மணி

பேராசிரியர் மற்றும் தலைவர்

பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: பிரதமர் யார்? காங்கிரஸ்-பாஜகவுக்கு ஸ்டாலின் மெசேஜ்?

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!

Elderly women treated like these in India

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *