நிதித்துறை சீர்திருத்தமும் நிலைகுலைந்த இந்தியாவும் : பகுதி 3

அரசியல் சிறப்புக் கட்டுரை

திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் ஓராண்டில் மக்கள்நல பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் வரவேற்பைப் பெறும் அதேசமயம் ஒன்றிய பாஜக அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ள இந்துத்துவவாதிகளிடம் அரசியல் சமரசம் செய்துகொண்டு அனுசரித்துச் செல்ல முனைவது விமர்சனத்துக்குள்ளாகிறது. இது வெறும் திராவிட-பார்ப்பனிய அரசியல் முரணாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இது உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் அரசின் இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாதிரிக்கும் அந்த அரச முதலாளித்துவத்தை ஒழித்து அந்த இடத்தில் தனியாரை பதிலீடு செய்யும் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண்.

சொத்தையும் சந்தையையும் இழக்கும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள்

இந்த அரச முதலாளித்துவ கூறான பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் ‘சீர்திருத்தங்கள்’ (Reforms) இந்தத் துறைகளில் மட்டுமல்ல; ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து துறைகளையும் பதம்பார்த்து வருகிறது. முன்பு பிஎஸ்என்எல்லை ஒழித்து ஜியோமயமாக்கி சீர்திருத்தத்தைச் செய்ததைப்போல இப்போது வங்கி, காப்பீடு, எரிபொருள் துறைகளையும் சீர்திருத்தி வருகிறது. கொரோனாவின்போது திறந்துவிட்ட அந்நிய நிதிமூலதனம் இப்போது விற்று வெளியேற வீழ்கின்ற பங்குச்சந்தையை பொதுத்துறை நிதி நிறுவனங்களை வைத்து தாங்கிப்பிடித்து முதலாளிகளின் சொத்து மதிப்பை உயர்த்துகிறது. கொரோனாவுக்கு முன்பு முதலாளிகளுக்குக் கொடுத்த வரிச்சலுகைகளால் இழந்த வருமானத்தை தன்னிடம் உள்ள எரிபொருளின் விலையையும் அதன் மீதான வரியையும் உயர்த்தி மக்களிடம் இருந்து பணம் கறக்கும் பசுவாகப் பயன்படுத்துகிறது.

ஒருபுறம் நிறுவனங்கள் பங்குச் சந்தை விலை உயர்வுக்கு ஏற்ப லாபத்தைப் பெருக்க பொருட்களின் விலையை உயர்த்துகின்றன மறுபுறம் அரசு வருமானத்தை ஈட்ட வரியை உயர்த்துகிறது. அது விலைவாசி உயர்வை ஏற்படுத்தி மக்களை வாங்க வழியற்றவர்களாக மாற்றி வறுமையில் தள்ளுகிறது. அரசின் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கும் முதலாளிகளும் அரசும் கூட்டுக்களவாணிகளாக இருப்பதால் மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றாமல் செயற்கையாகக் குறைத்து வைத்து மக்களின் கையிலும், சேமிப்பாகவும் இருக்கும் பணத்தின் மதிப்பைக் குறைத்து அதிக பணத்தைக்கொண்டு குறைவான பொருட்களையே நுகரும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். அது பொருளாதார சுருக்கத்தை நோக்கி நகர்த்தி வேலைவாய்ப்பைக் குறைக்கும் அதேவேளை மக்களின் உழைப்பை செல்வத்தைச் சுரண்டிக் கொழுக்கிறது; பொதுத்துறை நிதி நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி உருக்குலைக்கிறது. இந்தப் பொதுத்துறை நிதி நிறுவனங்களின் சந்தையை தனியார் நிறுவனங்கள் வேகமாகப் பிடித்து வருகின்றன.

பொருளாதார அடிப்படையைத் தகர்க்கும் நிதித்துறை தனியார்மயமாக்கம்

 இந்த நிதித்துறை தனியார்மயமாக்க ‘சீர்திருத்தம்’ தொலைத்தொடர்புத் துறையைப் போலல்லாமல் இந்தியப் பொருளாதார அடிப்படையையே மாற்றும் தன்மை கொண்டது. இந்திய நடுத்தர வர்க்கத்தைச் சேமிக்க ஊக்குவித்து அப்படி உருவாகும் மூலதனத்தை பொருளாதாரம் சுருங்கும்போது அரசு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீட்டு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்த இந்தப் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் உள்ள செல்வத்தைப் பயன்படுத்தி வந்தது. இப்போது இந்தியாவில் இப்படி நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பின் மூலமும் அதை வட்டிக்கு விட்டு வந்த வருவாயின் மூலமாக உருவாகும் வங்கி மூலதனம், பொருட்களை விற்று அடையும் லாபத்தின் மூலம் ஏற்படும் தொழிற்துறை மூலதனம், உலகமயத்துக்குப் பின்பு அனுமதித்த அந்நிய நிதி மூலதனம் ஆகிய அனைத்து மூலதனங்களும் உற்பத்தியில் ஈடுபட்டுச் சுழன்று வந்தது.

வேலைவாய்ப்பு அருகி நடுத்தர வர்க்கத்தின் அளவும் குறைந்து அவர்கள் சேமித்த செல்வத்தையும் ஏப்பம் விட்டுக்கொண்டு தொடர்ந்து பொருட்களின் விலையை உயர்த்தி அவர்களை உறிஞ்சி பொருளாதார வளர்ச்சி கீதம்பாடும்போது அந்த இரைச்சலில் மறைந்துகொண்டு சத்தமின்றி செல்வமனைத்தும் ஒரு சிலரிடம் சென்று குவியும். மக்கள் சேமிப்பை ஆதாரமாகக் (Base Money) கொண்டு உருவாக்கப்படும் கடன் பணத்தின்  (Credit Money) அளவு வேகமாகக் குறையும் அல்லது அருகும். இதைத் தொடர்ந்து தேக்கமடையும் பொருளாதார சோகத்தைத் தீர்க்க ஒன்றியமும் மாநிலங்களும் முன்கையெடுத்து மூலதனமிட்டு பொருளாதாரத்தை சுழலச்செய்ய இப்போது வெளிச்சந்தையில் அந்நிய நிதி மூலதனத்திடம் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அப்போது கடன் வாங்கிய நிதி மூலதனத்தை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்படும் கடன் பணமே இந்தியாவுக்குள் சுழலும். அதாவது அந்நிய மூலதனத்தை ஈர்த்தோ, கடனாக வாங்கியோ மத்திய வங்கி டாலரை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு இணையான ரூபாயை வெளியிடும். அதை அடிப்படையாகக் கொண்ட கடன் பணச் சுழற்சி ஏற்படும்.

டாலர் கடன் வலையில் வசமாக சிக்கிய இந்தியா

இப்படிக் கொடுத்த டாலரைக் கொண்டு அவர்களின் விலையுயர்ந்த உற்பத்தி தொழில்நுட்பங்களையும், ராணுவ தளவாடங்களையும் வாங்க வேண்டும்: உள்ளூர் உற்பத்தியில் அவர்களின் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பார்கள். டாலர் வந்த வேகத்தில் அவர்களுக்கே திரும்பும். இதையும் மீறி டாலரை அதிகம் சேமித்தால் அவர்களின் கடன் பத்திரங்களில் முதலிடச் சொல்வார்கள். கடன் கொடுக்கும்போது வட்டி விகிதத்தை குறைவாக வைப்பார்கள். இந்தப் பணம் உலகம் முழுக்க பாய்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு திரும்ப செலுத்த வேண்டிய நேரம் வரும்போது வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். குறைமதிப்பு கொண்ட டாலருக்கு அதிக மதிப்பு கொண்ட டாலரைக் கொண்டு வட்டியுடன் நாம் திருப்பி செலுத்த வேண்டும்.

கந்து வட்டிக்காரனிடம் கடனை அடைத்து வெளிவந்தவர்கள் யாரும் உண்டா? இது எல்லாம் வேலை செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கில் ஒரு குண்டை வீசினால் எரிபொருள் விலை விண்ணைத்தொடும். அவர்களின் ஏகபோகம் நிலவும் இந்த எரிபொருள் துறையைக் கொண்டு கடனாகக் கொடுத்த டாலரை எளிதாகக் கறந்து விடுவார்கள். கடனை கொடுக்க முடியாத பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் மேலும் கடன்  வேண்டுமென்றால் நலத்திட்டங்களை வெட்டி அரசு செலவைக் குறைக்க வேண்டும்; பொதுத் துறையை விற்று நிதியைப் பெருக்க வேண்டும்; வரியை உயர்த்த வேண்டும்; அப்படி செய்தால் கடன் தருகிறேன் என்று இப்போது இலங்கையையும் பாகிஸ்தானையும் நெருக்குவதுபோல கழுத்தில் கத்தியை வைத்து நெருக்கி பணிய வைப்பார்கள்.

சுயசார்பை இறையாண்மையை விட்டு அவர்கள் சொல்வதை செய்வதைத் தவிர வேறுவழி இருக்காது. அப்படியான சூழலை நோக்கி இந்தியாவை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். கொரோனாவின்போது அனுமதிக்கப்பட்ட டாலர் நிதி மூலதனம் இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பை 642.45 பில்லியன் டாலராக உயர்த்தியது. இப்போதைய உக்ரைன்-ரஷ்யப் போர் எண்ணெய் விலையை 120 டாலருக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இந்தியச் சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுகிறார்கள். போட்டதைவிட அதிகமான மதிப்பைக் கூட்டிக் கொண்டு வந்த டாலர் வெளியேறுவதோடு கையிருப்பாக இருக்கும் டாலரையும் அதிக அளவில் எரித்து இந்தியா எண்ணெயை வாங்க வேண்டும். அது நமது அந்நியச் செலாவணி கையிருப்பை 600 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் முன்பு உள்ளே நுழைந்த டாலருக்கு இணையாக சந்தையில் வெளியிட்டு சுழன்று கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான ரூபாயைக் குறைக்க வட்டி விகிதத்தை ஏற்ற வேண்டும்.

மாறும் உலக சூழலைக் கொண்டு சமாளிக்க முயலும் இந்தியா

 அப்படி வட்டி விகிதத்தை உயர்த்தினால் குறை மதிப்பில் கடன் வாங்கிய உள்ளூர் நிறுவனங்கள் அதிக மதிப்புகொண்ட ரூபாயைக் கொண்டு வட்டியுடன் கடனை அடைக்கவேண்டி வரும். அது உள்ளூர் நிறுவனங்களுக்கு பாதகமாகவும் டாலர் நிதி மூலதனத்தில் இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் முடியும். உள்ளூர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயற்கையாக வட்டி விகிதத்தைக் குறைவாக வைக்கும்போது விலைவாசி உயர்வில் மக்கள் தமது பணத்தை இழந்து வாங்க வழியற்ற வறியவர்களாக மாறுவார்கள். இருவரில் ஒருவரை இழப்பை ஏற்கச்செய்ய வேண்டும் என்ற திரிசங்கு நிலை ஒன்றியத்துக்கு. அது குறைவான வட்டி விகிதத்தைத் தெரிவுசெய்து மக்களை பலிகொடுத்து முதலாளிகளையும் தன்னையும் காத்துக்கொண்டு நிற்கிறது. இப்படி உள்ளூரில் மக்களைப் பலி கொடுத்தாலும் வெளியேறும் அந்நிய மூலதனமும் எரிபொருள் விலை உயர்வும் டாலர் கையிருப்பைக் குறைப்பதைத் தடுக்க முடியாது. சீனாவைப் போலவோ, ரஷ்யாவைப் போலவோ மூதன வெளியேற்ற கட்டுப்பாட்டை (Capital Control) விதிக்கும் அளவுக்கு இவர்கள் ‘சர்வாதிகாரிகள்’ அல்லர். அதேசமயம் எதுவும் செய்யாமல் விட்டால் கையில் இருக்கும் டாலர் கரைந்து அந்நியச் செலாவணி பற்றாக்குறையைச் சந்திக்கும் இலங்கை, பாகிஸ்தான் நிலைதான் இந்தியாவுக்கும்.

இந்தக் கொந்தளிப்பும் கடுமையும் கொண்ட உலகச் சூழலை புரிந்துகொண்ட உலக நாடுகள் கவனமாக காலடி எடுத்து வைக்கும் சூழலில் அவசரப்பட்டு அமெரிக்க நிதிமூலதனத்தையும் அவர்களின் நிறுவனங்களுக்கு இந்திய மின்னணு பொருளாதாரச் சந்தையையும் முன்பைவிட அகலதிறந்துவிட்ட இந்தியா அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சீன கடன் வலையைப் (Debt Trap) பற்றி வாய்கிழிய பேசும் கணவான்கள் இப்படி நாடுகளை டாலர் கடன் வலையில் விழவைப்பதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. வரப்போகும் ஆபத்தை உணர்த்த ஒன்றிய பாஜக அரசு பணமதிப்பிழப்பு ஆதரவு ‘அறிவாளியான’ அவாக்களின் பொருளாதார ஆலோசகரைக் கழற்றிவிட்டு இந்த நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆனந்த நாகேஸ்வரனை களத்தில் இறக்கியிருக்கிறது.

முந்தைய காலங்களைப் போலல்லாமல் இப்போது பெட்ரோலிய சந்தையில் நிலவிவந்த ஏகபோகம் உடைந்து பெட்ரோடாலர் நிதியக்கட்டமைப்புக் கப்பலிலும் விரிசல் விழுந்து புதிய பல்துருவ உலகத்தண்ணீர் உள்ளே புகுந்திருக்கும் சூழலை இந்தியா தனது நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்துகிறது. அந்நிய முதலீட்டு வெளியேற்றத்தை அனுமதித்துவிட்டு எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து சொந்த நாணயத்தில் வாங்கி தனது டாலர் இழப்பை குறைக்கப் பார்க்கிறது. கடன் பெருச்சாளி வலையை ஒருகையால் அடைத்துக்கொண்டு மறுகையால் வட்டி விகிதத்தைச் சிறிதளவு உயர்த்தி விலைவாசி உயர்வைச் சமாளிக்கப் பார்க்கிறது.

முரண்படும் அமெரிக்க, பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியங்கள்

முன்பு தடுப்பூசி மூலப்பொருட்கள் இந்தியச் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறந்துவிடுவதில் ஏற்பட்ட இந்திய-அமெரிக்க உரசலின்போது பிரிக்ஸ் கூட்டமைப்பை வைத்து இந்தியா காய்நகர்த்தியது. அவர்கள் அதானி நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட இரு முதலீட்டாளர்களிடம் இருந்து மட்டும் பணம் வருவதை வெளியிட்டும் பெகசஸ் உளவு விவகாரத்தைக் கசியவிட்டும் இவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இப்போது இந்த கடன் நிதி மூலதன எண்ணெய் பிரச்சினையின்போது மலிவாக வாங்கும் ரஷ்ய எண்ணெய் ரிலையன்ஸ், நயரா ஆகிய இரு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் செல்வதை வெளியிட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். வால்மார்ட்-அமேசான் நிறுவனங்களுக்கு எதிரான முற்றுரிமை (Anti Monopoly) விசாரணையை முடுக்கிவிட்டும் இவர்களுக்கு மாற்றான இணையதள வர்த்தக தளத்தை உருவாக்க அறிவிப்பை வெளியிட்டும் இந்தியா பதிலடி கொடுக்கிறது.

அமெரிக்காவுக்கான சூரியமின் தகடுகள் ஏற்றுமதிக்கு ஆசியான் நாடுகளுக்கு இரண்டு வருட சலுகை கொடுத்து அதில் இந்தியாவை அமெரிக்கா கழற்றி விடுகிறது. மாற்று எரிபொருள் சந்தை தனக்கு இல்லாமல் போவதைப் புரிந்துகொண்ட இந்தியா எண்ணெய் பொருளாதாரத்தைத் தொடர முடிவெடுத்து முன்பு சொந்த நாணயத்தில் எரிபொருள் வர்த்தகம் செய்த இரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. கிடப்பில் போடப்பட்ட ரஷ்யாவில் இருந்து இரான் வழியாக பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து மும்பை துறைமுகத்துக்குப் பொருட்களை கொண்டு வரும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பெருவழியை (International North–South Transport Corridor – INSTC) நடைமுறைக்கு கொண்டு வருகிறது. சரக்குப் பெட்டகங்கள் (Containers) இதன் வழியாக வர ஆரம்பித்து விட்டதாகச் செய்திகள் வருகின்றன. இந்தியச் சங்கிலித்தொடர் விற்பனை கடைகள் ரஷ்யாவில் திறக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிபர் புதின் சொல்கிறார்.

தமிழகத்தை நெருங்கும் மேற்கு

தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக இந்தியா அவர்களை உள்ளே விட்டுவிட்டு வைத்துக்கொள்ளவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் அல்லாடுகிறது. முன்பு பார்ப்பனியத்துடன் கட்டிப்புரண்ட மேற்குலகினர் இப்போது அவர்களுடனான உறவு கசக்க ஆரம்பிக்கவே குவாட் மற்றும் ஆகுஸ் கூட்டமைப்பில் இருக்கும் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் முக்கியமான வர்த்தக, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் தமிழகத்தின் பக்கம் திரும்பி திமுக அரசை அழைத்துப் பேசுகிறார்கள். இந்தியாவின் இந்த நகர்வுகள் டாலர் நெருக்கடியில் இருந்து அதனை விடுவிக்கலாம். ஆனால், புதிய டாலர் முதலீடுகள் இந்தியாவுக்குள் வருவதை அது தடுக்கும். கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட இணையப் பொருட்களுக்கான தேவை உச்சத்தை அடைந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஏகாதிபத்திய கடன் நிதிமூலதன சுழற்சி உச்சத்தை அடைந்து பொருளாதார மந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க உலக மேலாண்மை உடைந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் நிறுவனங்களின் உலக விரிவாக்கத்துக்கு தேவையான மென்பொருள் ஏற்றுமதி குறையும் வாய்ப்புகளும் அதிகம். இந்த நிலையில் இந்தியாவின் இந்த நகர்வு அந்தச் சந்தைக்கான வாய்ப்பை மேலும் குறுக்கி டாலர் வருமானத்தை மேலும் இழக்க வைக்கும்.

 அது வாங்கிய டாலர் கடனை அடைப்பதை சிக்கலானதாக மாற்றும். இந்தியச் சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் பகுதி அளவுதான் வெளியேறி இருக்கிறது. இனிவரும் காலங்களில் அது மேலும் வெளியேறினால் அந்த இடத்தைப் பொதுத்துறை நிதி நிறுவனங்களை வைத்து ஒன்றியம் பதிலீடு செய்வது சாத்தியமில்லாதது. பிரிக்ஸ் நாடுகளின் மாற்று நாணய வர்த்தகம் குறித்த பேச்சுக்கள் தொடங்கி இருக்கின்றன. இது எந்த அளவு முன்னேறி நடைமுறைக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவும் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய முனைந்திருக்கிறது. இந்த மாற்று நகர்வுகளின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அது பிரச்சினையின் தீவிரத்தை அவ்வப்போது தணிக்கலாம்; ஆனால் சரியும் இந்திய ரூபாய் மதிப்பைத் தடுத்து நிறுத்துவதோ, கபளீகரம் செய்யப்பட்டு வரும் மக்கள் சேமிப்பை காப்பதோ பொதுத்துறை நிறுவனங்களின் நிதி ஆதாரங்களை சரி செய்வதோ சாத்தியமில்லை. இந்திய உற்பத்தியில் ஏகாதிபத்திய நிதி மூலதனமும் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியமும் கொண்டிருக்கும் ஏகபோகத்தை உடைத்து அனைவருக்கும் வாய்ப்பளித்து சந்தையில் போட்டியை ஏற்படுத்தி உற்பத்தியைப் பெருக்கி வேலைவாய்ப்பை அதிகரித்து விலைவாசியைக் குறைக்கும் வகையிலான பொருளாதாரக் கொள்கை மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும்.

இருதலைக் கொள்ளியாய் ஒன்றிய பாஜக அரசு

இப்படி அந்நிய மூலதனமும் வெளியேறி உள்ளூர் மூலதனமும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டால் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை விரிவடையச் செய்து வேலைவாய்ப்பை எப்படிப் பெருக்குவது? ஒன்றியமும் மாநிலங்களும் எங்கிருந்து மூலதனத்தைத் திரட்டி முதலிட்டு புதிய பொருளாதார சுழற்சியை ஏற்படுத்துவார்கள்? டாலர் மூலதனத்தைப் பெற வேண்டுமானால் அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்து சென்று அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் இல்லையேல் “எதிரியான” சீனாவுடன் சமரசமாகச் செல்ல வேண்டும். அமெரிக்க அடிபணிதல் இந்திய இறையாண்மையை சுயசார்பை விலையாகக் கொடுக்க வைக்கும். சீன சமரசம் அம்பானி-அதானியின் மீதான பொருளாதாரத் தாக்குதலாகவும் பாஜகவின் மனித உரிமை மீறல், மத அடிப்படைவாத அரசியல் மீதான உலக ஊடக விமர்சனங்களாகவும் மாறும். மேலும் சீனர்களின் ஹோவாவெய் நிறுவனத்தை இந்தியாவுக்குள் மீண்டும் அனுமதிக்க வேண்டிவரும். அது எல்லை பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்து கூகுள், முகநூல் நிறுவனங்களின் ஏகபோகத்தை உடைத்தாலும் கூடவே ஜியோ, ஏர்டெல்லின் தொலைத்தொடர்புத்துறை ஆதிக்கத்தை உடைத்து இந்தியத் தரவுகளை அவர்கள் முற்றிலுமாக கைக்கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கும். இந்தச் சிக்கலான சூழல் ஒன்றிய பாஜக அரசை ஒரு தெளிவான திசையில் பயணிக்க விடாமல் முன்னுக்குப்பின் முரண்பட்ட அரசியல் பொருளாதார வெளியுறவுக்கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வைக்கிறது.

இந்தச் சூழலில் திமுக அரசின் மேற்குடனான  பொருளாதார நெருக்கமும் இந்துத்துவர்களுடனான மென்மையான அரசியல் சமரசமும் இப்போதைய தமிழக அரசியல் பொருளாதார அரசியல் நெருக்கடியைத் தீர்க்குமா?

அடுத்த கட்டுரையில் நாளை தொடரும் …

பகுதி 1 / பகுதி 2

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.