மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 28) மறுப்பு தெரிவித்துள்ளது. senthil balaji bail denied
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து 11வது முறையாக டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம் திரிவேதி, சதிஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, மருத்துவ அறிக்கையை சமர்பித்தார். தொடர்ந்து, ”தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே செந்தில் பாலாஜியின் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி பெலா எம் திரிவேதி, “தற்போது உள்ள சூழ்நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது அப்பெண்டிக்ஸ் சிகிச்சை போன்றதுதான். செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதற்கான சிகிச்சை என்ன என்பதையும் நான் கூகுளில் தேடினேன். அது மருந்துகளால் சரிசெய்யக்கூடியது என்பதையும் தெரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிடுவது போல எதுவும் சீரியஸாக இல்லை. எனவே மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் வழக்கமான ஜாமீன் நடைமுறையை பின்பற்றலாமே. ஏன் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்கிறீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்ப பெற்று விட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். மேலும் மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு!