கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த பல இந்திய வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக மாறியுள்ளது.
உதாரணத்திற்கு மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம். எஸ். தோனி The Untold Story’, சச்சின் டெண்டுல்கரின் ‘சச்சின் : A Billion Dream’, முகமது அசாருதீனின் ‘அசார்’, 1983 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை மையமாகக் கொண்டு வெளியான ’83’ என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
சமீபத்தில் தன்னுடைய வரலாறை படமாக்கப் போவதாக யுவராஜ் சிங் கூறியிருந்தார். இதேபோல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போவதாக, தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் கங்குலி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கங்குலி வேடத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க இருப்பதாக தெரிகிறது.
மேலும் இப்படத்திற்காக ஆயுஷ்மான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
படத்தில் நடிப்பது தொடர்பாக, சமீபத்தில் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சஜித் நதியவாலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
இந்தநிலையில் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றினை நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளாராம்.
ஆரம்ப காலத்தில் கிராஃபிக் டிசைனராக ‘படையப்பா’, ‘பாபா’, ‘சந்திரமுகி’, ‘அன்பே ஆருயிரே’, ‘சிவகாசி’, ‘மஜா’, ‘சண்டக்கோழி’, ‘சென்னை 600028’ உள்ளிட்ட படங்களில் சௌந்தர்யா பணியாற்றியிருக்கிறார்.
மேலும் ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படங்களையும் இயக்கியிருக்கிறார். அதோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோவா’ படத்தினையும் சௌந்தர்யா தயாரித்து இருந்தார்.
இந்தநிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு சௌந்தர்யா மீண்டும் கங்குலி பையோபிக்கை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, கங்குலி பயோபிக்கில் ரஜினி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் கிரிக்கெட்டை ஆதரிக்கும் ஒரு நபராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், மீண்டும் ஒரு கிரிகெட் படத்தில் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதனம்… உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா பதவிகள் என்னாகும்? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
யோகி பாபுவை தேடி வந்த ஹிந்தி பட வாய்ப்பு!
பரிசு தராத கணவன்… கத்தியால் குத்திய மனைவி – பெங்களூரில் நடந்த விபரீதம்!
தனுஷ் வெளியிட்ட ஸ்வேதா மோகனின் “ பெண் – The Anthem ”!
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா