சிரஞ்சீவி – ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட் பாதர் வெற்றியினை தொடர்ந்து சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதனை சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்குகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபாவளியன்று படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வால்டேர் வீரய்யா என்ற டைட்டிலுடன் டீசர் சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக நேற்று வெளியாகி இருக்கிறது.
அதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், ‘வால்டேர் வீரய்யா’வை கேலி செய்கிறார். அவரை தான் பற்ற வைத்த ஒற்றை பீடியில் பழிதீர்க்கிறார்.
மாஸ் சிரஞ்சீவி பேக்!
இந்த டீசர் அசால்ட்டாக மாஸ் மேனரிஸம் காட்டும் சிரஞ்சீவியை பார்க்கும்போது, அவர் மீண்டும் தனது பழைய உற்சாகத்திற்கு வந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
டீஸரில் அவரது தோற்றம், நடை, உடல் மொழி, கதாபாத்திர படைப்பு ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விசயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது.
இதனை கண்ட சிரஞ்சீவியின் ரசிகர்கள், ’மெகா ஸ்டாரின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் ரவி தேஜாவை டீசரில் காண முடியவில்லை.
எனினும் படத்தின் வெளியிட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.
‘வால்டேர் வீரய்யா’ அடுத்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.
வாரிசுக்கு போட்டியாக வீரய்யா!
வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் ’வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது.
உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அதே நேரத்தில் தெலுங்கில் வெளியாகும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா, விஜய்யின் வாரிசு படத்திற்கான ஆந்திரா மற்றும் தெலுங்கானா வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியான 2 மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிட்ட நிலையில் தற்போது வரை 9 மில்லியன் பார்வைகள் கடந்துள்ளது.
இராமானுஜம்
கோவை கார் வெடிப்பு: 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது!