சனாதன தர்மத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ ரிட் விசாரணையில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று (மார்ச் 6) தீர்ப்பளிக்கிறார். இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2023 செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.
உதயநிதி இவ்வாறு பேசியதற்கு இந்தியா முழுதும் எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில நீதிமன்றங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன.
கோ வாரன்ட்டோ என்றால் என்ன?
இந்த வகையில் உதயநிதி மீதும். அதே மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், வேறு மேடைகளில் சனாதனம் பற்றி பேசிய எம்பி. ஆ.ராசா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில், கோ வாரன்ட்டோ ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோ வாரன்ட்டோ என்றால், ‘எந்த அடிப்படையில் இவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் இன்னும் நீடிக்கிறார்கள்’ என்று கேட்பதாகும்.
அதாவது சனாதனத்தை இழிவுபடுத்திய உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் எவ்வாறு அமைச்சர்களாக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியும், ஆ.ராசா எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்று கேட்டுத்தான் இந்து முன்னணித் தலைவர்களால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சனாதனம் பிளவுகளைக் குறிக்கிறதா? நீதிபதி கேள்வி!
இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி அனிதா சுமந்த்,
“சனாதன தர்மத்தைப் பற்றிய உங்கள் புரிதல், அது வர்ணங்களை அல்லது சாதியின் அடிப்படையிலான உள்ளார்ந்த பிளவுகளைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் இப்படிப்பட்ட முடிவை, தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சான்றான இலக்கியம் என்ன? அப்படிப்பட்ட ஒரு அனுமானத்தை அடைய செய்த ஆராய்ச்சி என்ன?” நீதிபதி கேட்டார்.
உதயநிதி, ஆ.ராசா வாதங்கள்!
இதற்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “திராவிடக் கொள்கையாளர் தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ரா.வின் பேச்சு மற்றும் எழுத்துக்களின் அடிப்படையில் அமைச்சர் அதைப் புரிந்து கொண்டார்.
மேலும் பனாரஸில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியின் அறங்காவலர் குழுவால் வெளியிடப்பட்ட சனாதன தர்மம் – இந்து மதம் மற்றும் நெறிமுறைகளின் மேம்பட்ட பதிப்பு 1902 இல் வெளியிடப்பட்டது. அதன்படி சனாதன தர்மம் மனுஸ்மிருதி உட்பட நான்கு ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்டது என்று 1902 வெளியீடு தெளிவாகக் கூறுகிறது. இது வர்ணங்கள் அல்லது பிறப்பால் ஒதுக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் பிரிவினையைப் பரப்புகிறது. எனவே, அமைச்சரின் பேச்சு இந்த வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டது” என்று வாதிட்டார்.
மேலும், “இது 1902 ஆம் ஆண்டின் வெளியீடு. இது பொதுத் தளத்தில் உள்ளது. சாதியின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் நூலை நிராகரித்ததன் அடையாளமாக நமது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்” என்றும் வில்சன் கூறினார்.
வில்சன் தனது வாதங்களை முடித்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜாவின் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை தனது வாதங்களை முன் வைத்தார்.
இந்துக்களின் பிரதிநிதி யார்?
இந்து முன்னணி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள். சனாதனம் என்றால் மக்களை பிளவுபடுத்துவது என்று எங்கும் ஆதாரங்கள் இல்லை” என்று வாதாடினார்.
அப்போது உதயநிதியின் வழக்கறிஞர் வில்சன், ராசாவின் வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். ஆட்சியும் இந்துக்கள் வாக்களித்தே தேர்ந்தெடுக்கப்பட்டது. நோட்டாவை வெல்ல முடியாதவர்கள் இந்துக்களின் பிரதிநிதிகள் என்று கூறத் தேவையில்லை” என்று கூறினார்.
இதற்கு இந்து முன்னணி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். “இத்தகைய வாதங்கள் அரசியல் போரை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. கருத்தியல் ரீதியாக வாதங்கள் இருக்கும்போது அரசியலை அனுமதிக்க வேண்டாம்” என்று கூறினார்.
தகுதி நீக்கம் யார் உரிமை?
மேலும், “எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான தகுதி நீக்கத்தை பரிந்துரைப்பது 19 (1) (a) பிரிவின் கீழ் பாராளுமன்றத்தின் முழு உரிமை, இந்த அதிகாரப் பிரிவை நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும்.
அரசியல் சாசனத்தில் ஏதேனும் வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மேலும், மனுதாரர்கள் கேட்பது போல சட்டப் பேரவையின், நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார எல்லைக்குள் நீதிமன்றம் நுழையக் கூடாது, கூடுதல் தகுதிநீக்கத்தை பரிந்துரைக்கக் கூடாது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.
விரிவான வாதங்களைக் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், தேதி குறிப்பிடாமல் உத்தரவை ஒத்திவைத்தார். அதன் பின் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (மார்ச் 6) அளிக்கப்பட இருப்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.
அதாவது சனாதன தர்மத்தை இழிவாக பேசிய அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு, எம்பி ஆ.ராசா ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை.
சில நாட்களுக்கு முன் சனாதன விவகாரத்தில் தன் மீது இந்தியா முழுதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் நடத்தக் கோரி உதயநிதி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும்!
உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்.
சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் தெரிவித்த இதே சட்டப் பிரிவின் அடிப்படையில் உதயநிதி, சேகர்பாபு. ஆ.ராசா ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட் கோ வாரன் டோ ரிட் மனு.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில்… உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டு அரசியலிலும் இந்திய அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
யோகி பாபுவை தேடி வந்த ஹிந்தி பட வாய்ப்பு!
பரிசு தராத கணவன்… கத்தியால் குத்திய மனைவி – பெங்களூரில் நடந்த விபரீதம்!