thadi Balaji congrats Chinnadurai in person at nellai

”அந்த பதிலுக்காக தான் நேரில் வந்தேன்” : சின்னதுரையை பாராட்டிய தாடி பாலாஜி

சினிமா

நெல்லையில் சாதிய கொடுமையால் தாக்கப்பட்டு சாதனை படைத்த மாணவனை நடிகர் தாடி பாலாஜி நேற்று (மே 9) இரவு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்ட  மாணவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

அதே வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனுக்கு, ஆசிரியர்கள் நேரில் சென்று பாடம் எடுத்தனர். அதன்படி உதவியாளர் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் சின்னதுரை பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதனையடுத்து அவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேற்று நேரில் சென்று மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது சின்னதுரைக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி பேசுகையில், “சின்னதுரை பல தடைகளை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார். அவர் முதல்வரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்கள் அவரிடம், ’நீங்க சில பேரால பாதிக்கப்பட்டிருக்கீங்க.. அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க’னு கேள்வி எழுப்பினர்.

அதற்கு சின்னதுரை, “அவர்களும் என்னை மாறி படித்து நல்ல நிலைமைக்கு வரனும்” என்று கூறியிருந்தார். அந்த பதில் தான் என்னை இங்கு நேரில் வந்து அவரை சந்திக்க வைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அரசு உதவிகளை தாண்டி என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் தயங்காமல் கேட்கும்படி தாடி பாலாஜி சின்னதுரை மற்றும் அவரது சகோதரியிடம் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சவுக்கு சங்கரோடு பேசிய திமுக புள்ளிகள், ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள்

பிரபல மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் மறைவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *