அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.
இதனையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேனியில் வைத்து அவரை கைது செய்தனர். தற்போது கோவை சிறையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, சவுக்கு சங்கர் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் தேனி பழனிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் செய்தி ஆசிரியர் சந்தியா, சவுக்கு சங்கர் தன்னை பற்றி அவதூறாக கட்டுரை எழுதி இணைய பக்கத்தில் வெளியிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அதேபோல, பெண் காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மற்றும் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாக அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று (மே 8) விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் உடல்நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டபோது சவுக்கு சங்கரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தபோது, அவர் பயன்படுத்திய லேப்டாப், மொபைல், டெபிட் கார்டு, விசிட்டிங் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்.
அதேபோல அவரது நண்பர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோரது லேப்டாப், மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை ஆய்வு செய்ததில் சவுக்கு சங்கருடன் நெருக்கமாக இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அவருடன் அடிக்கடி உரையாடிய திமுக புள்ளிகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன” என்கிறார்கள்.
சவுக்கு சங்கரோடு ரெகுலராக பேசிக் கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் திமுக புள்ளிகளின் பட்டியல் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றும் சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபல மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் மறைவு!
தாய் கழகம் திரும்புகிறாரா திருநாவுக்கரசர்?