தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சட்டப்பிரிவு 302 ஐ பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி உள்பட 17 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வலுத்தது.
சட்டமன்றத்தில் இன்றைய (அக்டோபர் 19) தினம் அருணா ஜகதீசன் ஆணைய அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்களை வேண்டுமென்றே திட்டமிட்டு, காக்கை, குருவிகளைப் போல ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
ஆனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, அதை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று மனிதாபிமானமற்று பேசினார். அவர் மீது கொலைக் குற்றத்திற்கான 302 வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், ஆட்சியாளர்கள் உத்தரவில்லாமல் காவல்துறை அப்படி நடந்திருக்க முடியாது. யார் மீதெல்லாம் அந்த அறிக்கை சந்தேகப்பட்டு இருக்கிறதோ அவர்கள் மீதெல்லாம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் என்று சொல்லும் அளவுக்கு படுகொலைகள் நடந்தன. 13 பேரின் உயிரைக் காப்பாற்ற அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டார்.
தூத்துக்குடியில் நடந்த நிகழ்வுகளை தலைமைச் செயலாளர், டி ஜி பி உள்ளிட்டோர் நிமிடத்திற்கு நிமிடம் அவரிடம் தெரிவித்தும் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதை அருணா ஜகதீசன் ஆணையம் உறுதி செய்துள்ளது.
எனவே காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடியில் நடந்தது காட்டுமிராண்டித்தனமான செயல். இனிமேல் அதுபோன்று நடக்கக்கூடாது என்றார்.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான சின்னதுரை, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசியபோது, அரசால் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தாமல் மாவட்ட ஆட்சியர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டிருக்கிறார்.
ஆனால் சார் ஆட்சியர் தனக்கு இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தி இருக்கிறார் என்பதை அருணா ஜகதீசன் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இது துப்பாக்கிச்சூடு என்பதை தாண்டி கொலை என்று ஆணையம் பதிவிட்டு இருப்பதால் கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். வேதாந்தா நிறுவனத்துக்கும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு என்ன தொடர்பு இருந்தது என்பதையும் விசாரிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!
பரந்தூரை தேர்வு செய்தது ஏன்? சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!