விமர்சனம் : அயலான்

Published On:

| By Kavi

ayalaan movie review

காத்திருப்புக்கு ஏற்ற பலன் தருகிறதா?

நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு ஒரு திரைப்படம் வெளியாகும்போது, இப்போதுள்ள ட்ரெண்டுக்கு அது ஏற்றதாக இருக்குமா என்பதே ரசிகர்களிடம் இருந்து வரும் கேள்விகளில் முதன்மையானதாக இருக்கும். அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எக்காலத்திற்கும் ஏற்ற ஒரு விஷயத்தைப் பேசியிருந்தாலே போதும்; அந்த படம் பாதி வெற்றியைச் சம்பாதித்துவிடும். கடந்த காலத்தில், அதற்கேற்பப் பல உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும்.

சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், சரத் கேல்கர், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரவிகுமார் இயக்கியுள்ள ‘அயலான்’ படமும் அப்படியொரு கேள்வியுடனே தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

படம் எப்படியிருக்கிறது? படம் வெளியாவதில் நிகழ்ந்த கால தாமதம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

ayalaan movie review

வேற்றுக்கிரகவாசியின் வருகை!

ஒரு இளைஞன் தனது கிராமத்தில் வாழும் மக்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதை எண்ணிக் கவலையுற்று, அதற்குத் தீர்வு காண்பதற்காகச் சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் முகவரி தேடி அலையும்போது, தற்செயலாக மூன்று பேரைப் பார்க்கிறார். அவர்களுடனே சேர்ந்து தங்கி, வேலை செய்யத் தொடங்குகிறார்.

ஒருநாள் அவர்கள் மூவரும் மது போதையில் இருக்கும்போது, இவர் மட்டும் காரை ஓட்டி வருகிறார். அப்போது, ஒரு வேற்றுக்கிரகவாசியைத் தற்செயலாகச் சந்திக்கிறார்.

பூமியின் மையப்பகுதி வரை குடைந்து, உள்ளிருக்கும் திட, திரவ, வாயு நிலை எரிபொருட்களை எடுக்கும் நோக்கோடு ஒரு கார்பரேட் நிறுவனம் சென்னை வட்டாரத்தில் பணிகளை மேற்கொள்கிறது. அதன் முயற்சியை முறியடிக்கும் நோக்கிலேயே அந்த வேற்றுக்கிரகவாசி பூமிக்கு வந்திருக்கிறார்.

தங்கள் கிரகத்தைச் சேர்ந்த சிறு கல் ஒன்றை வைத்தே அந்த நிறுவனம் அப்பணிகளைச் செய்து வருவதாகவும், அச்செயல்பாடு நிறைவுறுவது பூமிக்கே ஆபத்து என்றும் அந்த வேற்றுகிரகவாசி சொல்வதை முதலில் அந்த இளைஞனோ, அவருடன் இருப்பவர்களோ நம்பவில்லை. ஆனால், மெதுமெதுவாக அந்த வேற்றுக்கிரகவாசியின் அதீத ஆற்றல்களைக் கண்டு மனம் மாறுகின்றனர்.

அதற்குள் அந்த வேற்றுக்கிரகவாசியின் விண்கலத்தை கார்பரேட் நிறுவன உரிமையாளரின் கையாட்கள் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். அதனைத் தம் வசம் கொண்டுவருவதற்காக நடக்கும் போராட்டத்தில், அந்த வேற்றுக்கிரகவாசியின் முயற்சி வெற்றியடைகிறது.

ஆனால், அவருடன் செல்லும் அந்த இளைஞர் வில்லன் கூட்டத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். வேற்றுக்கிரகவாசி அந்த நபரைக் காப்பாற்றினாரா? அதன்பிறகு என்ன நடந்தது என்று சொல்கிறது ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாதி.

முழுக்க முழுக்க ஒரு அறிவியல் புனைவு என்றபோதும், சாதாரண ரசிகர் ஒருவர் தலையைப் பிய்த்துக்கொள்ளும்படியான எந்தக் காட்சியும் இதில் இல்லை. அதுவே, இப்படத்தின் மாபெரும் பலம்.

பழைய சிவகார்த்திகேயன்

ayalaan movie review

வேலைக்காரன், ரெமோ காலகட்டத்தில் பார்த்த சிவகார்த்திகேயனை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. ஏனென்றால், நிறைய காட்சிகள் அப்போது படம்பிடிக்கப்பட்டவை. அதுவே, படத்தில் அவரது நடனம், நடிப்புத்திறமையை, தோற்றத்தைச் சமீபத்திய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

கருணாகரன், யோகிபாபு இருவரும் ஆங்காங்கே ‘காமெடி ஒன்லைனர்’களை அள்ளிவிட்டு நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். மிகச்சில இடங்களில் கோதண்டம் அவர்களோடு இணைந்து நிற்கிறார்.

வழக்கமாக இது போன்ற அறிவியல் புனைவு கதைகளில் நாயகிகள் எவ்வாறு தோன்றுவார்களோ, அச்சு அசலாக அது போன்றதொரு பாத்திரமே ரகுல்ப்ரீத் சிங்குக்குத் தரப்பட்டுள்ளது. மற்றபடி, அவரது பாத்திரத்திற்கென்று தனியாக முக்கியத்துவம் ஏதுமில்லை.

வில்லனாக வரும் சரத் கேல்கர் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் நம்மை மிரட்டுகிறார். அவரது கையாளாக வரும் இஷா கோபிகர் மனிதர்தானா அல்லது ரோபாவா என்ற சந்தேகம் தீர்வதற்குள் படமே முடிந்துவிடுகிறது (என்சுவாசக்காற்றே பார்த்து இஷாவின் ரசிகர்கள் ஆனவர்களுக்கு இப்படம் தருவது ஏமாற்றமே!).

இன்னும் பானுப்ரியா, முனீஸ்காந்த், பால சரவணன், செம்மலர் அன்னம் என்று பலரும் தலைகாட்டியுள்ளனர்.

இது போன்றதொரு படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி அஸ்திவாரமாகவே அமையும். அதனைக் கனகச்சிதமாகப் புரிந்துகொண்டு பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

வேற்றுக்கிரகவாசி பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் என்பவர் நடித்த காட்சிகளை ‘க்ரீன் மேட்’ முறையில் விஎஃப்எக்ஸுக்கு ஏற்றவாறு படமாக்கியிருப்பதும், பெரும்பாலான இடங்களில் விஎஃப்எக்ஸ் சிறப்பாக அமைந்திருப்பதும் அவரது பணியைக் கொண்டாடத் தூண்டுகிறது.

முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். சிவகார்த்திகேயன், கருணாகரன் தங்கியிருக்கும் இடம் போன்றவை கொஞ்சம் செயற்கையாகத் தெரிந்தாலும், அறிவியல் ஆய்வகம் மற்றும் சுரங்கம் தோண்டுவதைக் காட்டுமிடங்களில் அவரது குழுவினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

’அயலான்’ படத்தின் திரைக்கதையில் ஹாலிவுட் சாயல் நிறைய. அதிலும், மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை ஒரு பாத்திரம் செய்வதாகத் திரைக்கதையை அமைத்துள்ளார் ரவிகுமார். குறிப்பாக தனது கிரகத்தைச் சேர்ந்த கல்லை வேற்றுக்கிரகவாசி எடுப்பதும் தொலைப்பதும் தொடர்கதையாகிறது.

வில்லனுக்கும் நாயகனுக்குமான மோதல் நேரடியாகத் தொடங்குவதற்கு நெடுங்காலம் ஆனது போன்ற உணர்வு. அதையெல்லாம் தாண்டி, நாயகனுக்கும் வேற்றுக்கிரகவாசிக்குமான பிணைப்பு இன்னும் வலுவாக அமைந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது.

இது போன்ற எண்ண அலைகளை மீறி, சீராக ஒரு கதையைத் திரையில் சொல்கிறோம் என்பதனை நம் மனதில் இருத்துகிறார் படத்தொகுப்பாளர் ரூபன்.

ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பிற்பாதியில் அவரது பின்னணி இசை விறுவிறுப்பை அதிகப்படுத்துகிறது.

அசாத்திய தைரியம்!

ayalaan movie review

பிரமாண்ட பட்ஜெட் இல்லாத காரணத்தால், சிலவற்றைத் திரையில் காண்பிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதிலும், நாடு நகரம் முழுவதும் வில்லனால் பாதிப்புறுவதாக ஒரு காட்சி உண்டு. அதில் விஎஃப்எக்ஸ் மிக நேர்த்தியாக இல்லை. நிச்சயமாக படத்தின் பட்ஜெட் என்ற விஷயம் அனைத்துக்கும் முன்பாக ‘சேர்’ போட்டு அமர்ந்திருக்கிறது.

நாயகனுக்கோ, நாயகிக்கோ இதில் பெரிதாகப் பின்கதைகள் இல்லை. ஸ்பீல்பெர்க்கின் ‘ஈ.டி.’யில் குழந்தைகளின் பாசமும் அன்பும் பூதாகரப்படுத்தப்பட்டிருக்கும். இதில் அது போன்றதொரு விவரணை இல்லை. அது போன்ற எதிர்மறை அம்சங்களைத் தாண்டி, வில்லனுக்கும் நாயகனுக்குமான மோதலை முன்னிறுத்தும் ஒரு வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையில் ஒரு வேற்றுக்கிரகவாசியைக் கொண்டு வரலாம் என்று யோசித்ததற்கு நிச்சயம் அசாத்திய தைரியம் வேண்டும். அதற்கு, இயக்குனர் ரவிகுமாரைப் பாராட்ட வேண்டும்.

வாய்விட்டுச் சிரிக்கும்படியான காட்சிகள் அடுத்தடுத்து வருவதில்லை; அசர வைக்கும் பிரமாண்டம் படம் முழுக்க இடம்பெறவில்லை. ‘மெசேஜ்’ சொல்லும் ஒரு கமர்ஷியல் படத்திற்கான உள்ளடக்கம் இருந்தபோதும், ‘ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற எண்ணமே நம்மில் ஏற்படுகிறது. இவையனைத்துக்கும் படம் உருவாக எடுத்துக்கொண்ட காலம் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்; ஆனால், அதையும் மீறிப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது பெரிதாக அயர்ச்சி இல்லை. ’பழையது’ என்ற எண்ணம் ஏற்படவில்லை. அதனை உருவாக்க முயற்சித்ததற்கு இயக்குனர் ரவிகுமாரையும் ஒட்டுமொத்த அயலான் குழுவையும் தாராளமாகப் பாராட்டலாம்.

சுருக்கமாகச் சொன்னால், பண்டிகைக் காலத்தின்போது குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ‘அது ஒன்றே போதும்’ என்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

அயலான் : ட்விட்டர் விமர்சனம்!

எதற்கு இத்தனை வழக்கறிஞர்கள்?: பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share