குழந்தை நட்சத்திரமாக நடித்து, வளர்ந்தபின்னர் நாயகனாக மாறியவர்களில் ஒருவர் மகேந்திரன். ஆனால், இன்றும் ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று அவர் அடையாளம் காணப்படுவது ஒருவகையில் சோகமான விஷயம்.
அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் உருவாகும் வகையில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் ஜுனியராக திரையில் தோன்றி ஈர்த்திருந்தார்.
வசீகரிக்கும் தோற்றமும் நடிப்புத் திறமையும் இருந்தும், ஏன் அவர் வெற்றிப்படங்களில் இடம்பெறுவதில்லை? என்ற கேள்வி சினிமா ரசிகர்களைத் தொடர்ந்து வருகிறது. தற்போது மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள ‘அமீகோ கேரேஜ்’ அதற்குப் பதில் தந்திருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
ஒரு ரவுடி உருவாகிறான்
நண்பர்களுடன் விளையாடி, அரட்டையடித்து, வம்பிழுத்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான ருத்ரா (மகேந்திரன்). ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் அவரையும் நண்பர்களையும் அடித்துவிட, அவரிடம் இருந்து தப்பிக்கத் தங்கள் பகுதியில் இருக்கும் ‘அமீகோ கேரேஜ்’ ஆனந்தின் (ஜி.எம்.சுந்தர்) உதவியை நாடுகிறார்.
எந்நேரமும் ஸ்பானிஷ் பாடல்கள், மது பாட்டில்கள் உருளும் சத்தம் என்றிருக்கும் அந்த கேரேஜை கண்டால் ருத்ராவின் பெற்றோர் உட்பட, அப்பகுதியில் இருக்கும் எல்லோருக்கும் அலர்ஜி. அதனால், ‘அந்த கேரேஜ் பக்கம் மட்டும் போயிடாதே’ என்பதே அவர்களது அட்வைஸாக இருக்கிறது.
அதையும் மீறி, அங்கு நண்பர்களுடன் செல்கிறார் ருத்ரா. அப்போது, அவர்களது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால், ஆனந்த் உடனான நட்பு இறுகும்போது ருத்ராவின் பெற்றோர் மனதில் உணர்ந்த பயம் உண்மையாகிறது.
பள்ளி, கல்லூரி முடித்தபின்னர் கேரேஜ், ஒயின்ஷாப், வெட்டிப்பேச்சு என்றாகிறது ருத்ராவின் வாழ்க்கை. அந்த காலகட்டத்தில், குரு (தாசரதி நரசிம்மன்) எனும் ரவுடியோடு அவருக்கு மோதல் ஏற்படுகிறது. அப்போது, குருவைத் தாக்குகிறார் ருத்ரா.
Gaami Movie Review: காமி – திரை விமர்சனம்!
அதற்கான எதிர்வினையாக, தொடர்ந்து அவரிடம் வலிய வந்து வம்பிழுக்கிறார் குரு. அப்போதெல்லாம், குருவுக்கு ஆசானாக இருக்கும் முத்துவிடம் போய் ‘பஞ்சாயத்து’ பேசி ருத்ராவைக் காப்பாற்றுகிறார் ஆனந்த்.
மகன் தொடர்ந்து வம்புதும்புகளில் மாட்டிக்கொள்வதை விரும்பாத ருத்ராவின் தந்தை, அவருக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தருகிறார். வேலைக்குச் செல்லத் தொடங்கியபிறகு, ருத்ராவின் வாழ்வு தலைகீழாகிறது. அவர் ரொம்பவும் பொறுப்பானவராக மாறுகிறார்.
உடன் வேலை செய்யும் தமிழ் (ஆதிரா ராஜ்) மீது அவருக்குக் காதல் பிறக்கிறது. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டாகிறது. அப்போது, அவர்கள் இருவரிடமும் வம்பிழுக்கத் தொடங்குகிறார் குரு.
தான் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு குரு தடையாக இருப்பதை விரும்பாத ருத்ரா, ஆனந்தின் துணை இல்லாமல் நேரடியாக முத்துவைச் சந்திக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில், ‘எதிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு உங்களைக் கொல்ல ருத்ரா என்பவன் வருகிறான்’ என்று முத்துவிடம் பொய்களை அள்ளிவிடுகிறார் குரு.
அதன்பிறகு, முத்துவை நேரில் சந்திக்கிறார் ருத்ரா. அந்தக் கணம் முதல் அவரது வாழ்வு எப்படித் தலைகீழாக மாறியது என்பதைச் சொல்கிறது ‘அமீகோ கேரேஜ்’ஜின் இரண்டாம் பாதி.
ஒரு ரவுடி எப்படி உருவாகிறான் என்பதைச் சொல்லி, அதனைத் தவிர்த்திருக்கலாமே என்று தனது வித்தியாசமான பார்வையை முன்வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்.
ஆனால், தாவணிக்கனவுகள் படத்தில் வரும் ‘ஒரு நாயகன் உருவாகிறான்’ பாடலைப் போல நாயகன் உருமாறும் காட்சிகளுக்கு அவர் தந்திருக்கும் ‘பில்டப்’ ஒட்டுமொத்தமாகக் கதையின் ஜீவனை உருக்குலைத்திருக்கிறது.
அதென்ன ‘அமீகோ’
’அமீகோ’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பான’ என்று அர்த்தமாம். அந்தப் பெயருக்கு ஏற்ப, இக்கதையில் ஆனந்தாக வரும் ஜி.எம்.குமார் பதின்ம வயதில் ஒரு ஸ்பானிஷ் பெண்ணைக் காதலித்ததாகச் சொல்கிறார் இயக்குநர். அப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துகையில் ஸ்பானிஷ் மக்களின் இசையை ஒலிக்க விட்டிருக்கிறார்.
ஆனால், நட்புக்கு அப்பாத்திரம் தரும் முக்கியத்துவமோ, வாழ்க்கையில் நண்பர்களுக்குத் தந்திருக்கும் இடமோ திரைக்கதையில் விவரிக்கப்படவில்லை. அது, கிளைமேக்ஸ் திருப்பத்தை உப்புசப்பில்லாமல் ஆக்குகிறது.
நாயகன், நாயகி, வில்லன் என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள எந்தப் பாத்திரத்திற்கும் சரியான பின்னணியைத் திரைக்கதையில் காட்டவில்லை இயக்குநர். அது மட்டுமல்லாமல், கதை நிகழும் களத்தையும் ‘டீட்டெய்லாக’ காட்டத் தவறியிருக்கிறார்.
Singappenne Movie : சிங்கப்பெண்ணே – திரை விமர்சனம்!
வில்லன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தெறியாமல் திரும்பத் திரும்ப அது பற்றிச் சிந்திப்பதே, நாயகன் மீது அவர் வன்மம் வளர்க்கக் காரணமாக உள்ளது என்பதனைச் சொல்லக் கதையில் வலுவான காட்சிகள் சேர்க்கப்படவில்லை.
மிக முக்கியமாக, பெற்றோர் புத்திமதி கேட்டு வேண்டாதவற்றைத் தவிர்த்திருந்தால் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருக்கலாம் என்பதனை நாயகன் வழியே நமக்குப் பொட்டிலடித்தாற்போலச் சொல்ல விரும்பியதைச் சரியாகச் சொல்லாமலேயே கடந்திருக்கிறார். அவையே இப்படம் தொட்டிருக்க வேண்டிய உயரத்தைக் குலைத்திருக்கின்றன.
காட்சிகளின் தொடக்கத்தைச் சரியாக அமைத்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், அவற்றின் முடிவைத் தீர்மானிப்பதில் குழம்பியிருக்கிறார். அதனால் பல காட்சிகள் அரைகுறையாய் உருவாக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. அதையும் மீறி முதல் பாதி கொஞ்சமாய் சுவாரஸ்யம் தருவது ஆச்சர்யம் தான்.
என்னவென்று சொல்வது
’நாட்டாமை’, ‘கும்பகோணம் கோபாலு’ போன்ற படங்களின் வழியே நம்மை கொள்ளை கொண்ட குழந்தை நட்சத்திரம் மகேந்திரன். அவற்றையெல்லாம் மறக்கடிக்கும்விதமாக ஒரு நாயகனாகத் தோற்றமளித்தாலும், நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை.
படத்தின் ஒருவரிக் கதையை மட்டும் கேட்டுவிட்டு நடிக்கத் தொடங்கிவிடுவதுதான் அதற்குக் காரணமா? என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது ‘அமீகோ கேரேஜ்’. ஆதிரா ராஜ், தீபா பாலு என்று இரண்டு பேர் இதில் நாயகிகளாக வந்து போயிருக்கின்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில், தீபா பாலுவை மகேந்திரன் ‘சைட்’ அடிப்பதாகத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்த ‘போர்ஷனே’ தேவையற்றது என்பதால் தீபாவின் பாத்திரம் நம்மை எந்த வகையிலும் ஈர்க்கவில்லை.
மாறாக, வித்தியாசமானதொரு பின்னணியுடன் ஆதிரா ராஜை ‘தமிழ்செல்வி’யாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அவரும் அழகாகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், நாயகன் உடனான அப்பாத்திரத்தின் காதலை வலுவாகச் சொல்லாத காரணத்தால் பின்பாதியில் அது சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான காட்சிகள் ‘பிளாஸ்டிக்’ தன்மையை நிறைத்து நிற்கின்றன.
வில்லனாக வரும் தாசரதி நரசிம்மன் வெறுமனே தோற்றத்தில் மட்டும் மிரட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் படத்தில் இல்லை. போலவே, முத்துவாக நடித்தவரும் நம்மை மிரட்சியடைய வைக்கிறார்.
ஜி.எம்.சுந்தர் திரையில் ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்து போயிருக்கிறார். படம் நகர நகர, அப்பாத்திரம் அப்படியே சொங்கிச் சோம்பிவிடுவது மொத்தக் கதையையும் குலைத்துப் போட்டிருக்கிறது.
இவர்கள் தவிர்த்து நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், அவருக்கு உதவும் கேங்க்ஸ்டர் குழு, ஆசிரியராக வரும் சிரிக்கோ உதயா, பெற்றோர்களாக நடித்தவர்கள் என்று ஒரு டஜன் பாத்திரங்கள் படத்தில் உண்டு. அவர்களில் எவரது முகத்தையும் நினைவில் இருத்த முடியாத அளவுக்கே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரேமிலும் பல அடுக்குகளை நிறைக்கும் ஒளிப்பதிவு பாணியில் இருந்து வேறுபட்டு, வெறுமனே பாத்திரங்களை மட்டும் திரையில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து.
ஸ்ரீமன் பாலாஜியின் கலை வடிவமைப்பில், ‘அமீகோ கேரேஜ்’ஜில் இருக்கும் பழைய அம்பாசிடர் கார் வடிவ சோபா நம்மை ஈர்க்கிறது. பின்பாதி ரொம்பவே நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கும்போது, நமது எரிச்சல் முழுவதும் ரூபன், சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பின் மீது திரும்புகிறது.
மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!
பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்; காட்சிகள் சவசவ என்று நகர்வதால் பின்னணி இசையின் பக்கம் கவனம் செல்லவே இல்லை.
தொடக்கக் காட்சிகளில் நன்றாக வளர்ந்த தாடியோடு மகேந்திரனும் அவரது நண்பர்களும் தோன்றுவதை வசனங்களின் வழியே சமாளித்திருக்கும் இயக்குநர், அந்த புத்திசாலித்தனத்தைப் பல இடங்களில் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்.
’முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகும் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லி, அமைதியான வாழ்வுக்குத் தடையாக நிற்கும் குற்றங்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமே’ என்று இப்படத்தில் சொல்ல விரும்பியிருக்கிறார்.
‘என் மனதிலிருப்பது இதுதான்’ என்பதை வசனங்களில் சுட்டிக்காட்டியவர், அதற்கேற்றவாறு காட்சிகளையும் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன சொல்வது, அது நிகழாமல் போனதால் ‘டான் ஆயிட்டாப்ல..’ என்பது போன்ற கிண்டல் கேலிகளை தியேட்டரில் எதிர்கொள்கிறது ‘அமீகோ கேரேஜ்’!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: மீண்டும் குறைந்த விலை… நகைக்கடை பக்கம் போகலாமா?