ஒரு திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதற்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை என்று காட்சியாக்கம் சார்ந்த அம்சங்கள் தாண்டி போஸ்டர் வடிவமைப்பு, படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள் என்று பல விஷயங்கள் உத்தரவாதம் தரும்.
அதற்கேற்றாற்போல, ஒவ்வொன்றும் வித்தியாசமாக அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியது ‘காமி’ படக்குழு. தெலுங்கில் தயாரான அப்படத்தின் ட்ரெய்லர் கூட ரொம்பவே வித்தியாசமானதொரு அனுபவத்தைப் பெறப் போகிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
காரணம், தனது கடந்த காலத்தை அறியும் நோக்கில் ஒரு அகோரி மேற்கொள்ளும் பயணத்தைச் சொல்வதாக அதன் கதை இருந்தது தான். அந்த தேடல் எவ்வாறானதாக இருந்தது என்று சொல்லும் ‘காமி’ தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரியோடு ‘நாடோடிகள்’ அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வித்யாதர் காகிடா இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆறு ஆண்டுகளாக உழைத்து மெருகேற்றித் தந்துள்ளார். இந்த திரைப்படம் எந்த அளவுக்கு நமக்குச் சுவையான காட்சியனுபவத்தைத் தருகிறது?
ஒரு மலையேற்றத்தின்போது
வாரணாசியில் அகோரியாக வாழும் சங்கரை (விஸ்வக் சென்), அவருடன் இருப்பவர்கள் ஒதுக்கி வைக்கின்றனர். மனிதத் தொடுகை அவருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதே அதற்குக் காரணம்.
எந்த மனிதரைத் தொட்டாலும், அவரது மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன; ரத்தம் கொதிக்கிறது; உடல் ‘ஜிவ்’வென்று விறைக்கிறது. இதயம் செயலிழக்கத் தொடங்குகிறது. ‘இப்படிப்பட்ட வாழ்வைப் பெற்றது பெருஞ்சாபம்’ என்பது சக அகோரிகளின் கருத்தாக இருக்கிறது.
அதனால், சங்கரை அங்கிருந்து சென்றுவிடுமாறு வற்புறுத்துகிறார் தலைமை அகோரி. கூடவே, ’உன்னை எங்களிடத்தில் கொண்டுவந்த சேர்த்த கேதார் பாபாவைக் கண்டு, உனது கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்’ என்கிறார்.
அதற்காக, பிரயாக்ராஜ் புறப்படுகிறார் சங்கர். அங்கு கேதார் பாபா இல்லை. அவர் இறந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. ஆனால், கேதார் பாபா கொடுத்ததாகச் சொல்லி சில பொருட்களைச் சங்கரிடம் கொடுக்கிறார் அவரது சீடர்.
அவை மூலமாக, மாலிபத்ரா எனும் ஒளிரும் காளான் குறித்த விவரங்களும், அதனால் மட்டுமே சங்கரின் கஷ்டத்தைப் போக்க முடியும் என்றும் தெரிய வருகிறது. ’முப்பத்தாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை முளைக்கும் அந்த காளான்கள் இன்னும் 15 நாட்களுக்குள் இமயமலையிலுள்ள துரோணகிரியில் காணக் கிடைக்கும்’ என்கிறார் பாபாவின் சீடர்.
அது மட்டுமல்லாமல், அதனைத் தேடிக் கண்டெடுக்கும் பயணத்தில் டாக்டர் ஜானவி எனும் பெண் உதவுவார் என்று கூறி, அவரைச் சங்கருக்கு அறிமுகப்படுத்துகிறார். மனிதர்களின் அருகாமையை வெறுக்கும் சங்கர், வேறு வழியில்லாமல் ஜானவி உடன் ஒரே திசையில் பயணிக்கிறார்.
பனிப்புயல், குளிர், கரடுமுரடான பாதை என்று பல தடைகளைத் தாண்டி, அவர்கள் உயிரைப் பணயம் வைக்கும் சூழ்நிலை பலமுறை ஏற்படுகிறது. அதற்குப் பின்னாலும், அவர்கள் அப்பயணத்தைத் தொடர்ந்தனரா? மாலிபத்ரா வழியாகத் தனது கடந்தகாலத்தை சங்கர் அறிந்தாரா என்று சொல்கிறது ‘காமி’.
இக்கதையின் ஊடே, ஆந்திரக் கிராமத்தில் வளரும் உமா என்ற சிறுமி சம்பந்தப்பட்ட நினைவுகளையும், மருத்துவ ஆய்வகமொன்றில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு இளைஞர் குறித்த நினைவுகளையும் அவ்வப்போது கனவுகளாக எதிர்கொள்கிறார் சங்கர். அவர்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் என்னவானார்கள்?என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இமயமலையில் ஜானவியும்,சங்கரும் மேற்கொள்ளும் பயணத்தைச் சுற்றியே, ’காமி’யில் பெரும்பாலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒருவருக்குச் சுவாரஸ்யத்தைத் தரலாம்; மாறாக, பெரும் அலுப்பையும் ஊட்டலாம். அவரவர்க்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்தே, இந்த படத்தை மேற்கொண்டு காண்பதா? இல்லை வேண்டாமா?என்ற முடிவுக்கு வர முடியும்.
படத்தின் யுஎஸ்பி இதுவே
இந்தக் கதையில் உமாவாக ஹாரிகா என்ற சிறுமியும், ஆய்வகத்தில் இருந்து தப்பிக்க முயலும் இளைஞனாக முகம்மது சமத்தும் நடித்துள்ளனர். சங்கராக வரும் நாயகன் விஸ்வக் சென்னுக்கு, கமர்ஷியல் படத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்த இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாயகி சாந்தினி சவுத்ரிக்கும் கூட அது பொருந்தும்.
அவர்கள் மட்டுமல்லாமல், இதில் தோன்றியுள்ள மாயங்க் பரேக், சாந்தி ராவ் உள்ளிட்டோரும் கூட வழக்கத்திற்கு மாறான நடிப்பையே இதில் வெளிப்படுத்தியுள்ளனர். ஹாரிகாவின் தாயாக நடித்துள்ள அபிநயா, தேவதாசி எனும் நிலையை அடைந்ததற்காக வாழ்நாள் முழுவதும் அவமானத்தைச் சுமப்பவராகத் தோன்றியுள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும்.
இப்படத்தில் விஸ்வநாத், செலுமல்லா, ரம்பி நந்திகம் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் கைவண்ணத்தில் வெவ்வேறு களங்கள் ஒன்றாகத் திரையில் இணைக்கப்பட்டுள்ளன. அக்காட்சிகளில் பெரும்பாலானவை சாம்பல், கருப்பு மற்றும் லேசான நீல வண்ணக் கலவையைத் தன்னகத்தே கொண்டிருப்பது இக்கதையில் இருக்கும் வெறுமையை நமக்குக் கடத்த உதவியிருக்கிறது.
பெரும்பாலான காட்சிகளில் பனி படர்ந்த இமயமலையைக் காட்ட ‘விஎஃப்எக்ஸ்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. ’க்ரீன்மேட்’ முறையில் அவை படம்பிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் மிகச்சிறப்பான தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
Movie Review : ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – திரை விமர்சனம்!
பிரவல்யா துடுபுடியின் தயாரிப்பு வடிவமைப்பும் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தந்துள்ளது. வீகர் அவஸ்தி உடன் இணைந்து மூன்று பாடல்களைத் தந்துள்ளார் நரேஷ் குமரன். அவர் அமைத்துள்ள பின்னணி இசை, காட்சிகளின் தன்மையை நமக்கு எளிதாக உணர்த்துவதாக உள்ளது.
படத்தொகுப்பாளர் ராகவேந்திரா திருண், திரைக்கதையில் நிறைந்திருக்கும் குழப்பமான சித்தரிப்பை முடிந்தவரை சிடுக்குகள் இல்லாமல் ஆக்கத் துணை நின்றுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் வித்யாதர் காகிடா உடன் எழுதியிருக்கிறார் பிரத்யுஷ் வத்யம்.
நேர்கோடாகச் சொன்னால் மிகச்சாதாரணமாகத் தெரியும் ஒரு கதையை, ‘நான்லீனியர்’ முறையில் சொன்ன வகையில் இக்கூட்டணி கவனம் ஈர்க்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி ஆகவும் உள்ளது.
என்ன வித்தியாசம்
சங்கர் எனும் அகோரி, உமா எனும் ஏழெட்டு வயதுச் சிறுமி, ஆய்வகமொன்றில் வதைபடும் பதின்ம வயது இளைஞர் என்று மூன்று மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடுத்தடுத்துக் காட்டுகிறது ‘காமி’ திரைக்கதை. என்ன சம்பந்தம் இவர்களுக்கு இடையே..? இந்தக் கேள்விக்கான பதிலாகவே திரைக்கதை விரிகிறது. அதுவே, இப்படத்தினை முற்றிலும் வித்தியாசமானதாக மாற்றுகிறது.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் ஏதேதோ இடங்களில் வசிக்கும் மூன்று கதாபாத்திரங்கள் எந்தப் புள்ளியில் ஒன்றாக இணையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வகையில் ஈர்க்கிறது ‘காமி’. அதேநேரத்தில், அம்மூன்று கதைகளும் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அளவுக்கு ‘ஸ்லோமோஷனில்’ நகர்கின்றன.
வழக்கமாகத் தெலுங்கு படங்களில் நாம் காணும் விஷயங்கள் எதுவும் இப்படத்தில் இல்லை. பாட்டு, பைட், நகைச்சுவை, கிளாமர் காட்சிகள் என்று எந்த பார்முலாவிலும் இந்த படம் அடங்கவில்லை. முக்கியமாக நாயகனும்,நாயகியும் ஜோடி சேர்ந்து டூயட் பாட வேண்டுமென்ற விஷயம் இதில் துளி கூட இல்லை.
அதேநேரத்தில் தாயின் அன்பு, குழந்தையின் ஏக்கம், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வேட்கை என்று அடிப்படையான மனித உணர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகள் இதிலுண்டு. இந்தப் படத்தில் சில அறிவியல் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Singappenne Movie : சிங்கப்பெண்ணே – திரை விமர்சனம்!
அவற்றை நேரடியாக விளக்கும் காட்சித் துண்டுகள் ‘கட்’ செய்யப்பட்டுள்ளன. அவை ‘கிளைமேக்ஸ் ட்விஸ்ட்’டை முன்கூட்டியே உணரச் செய்யும் என்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.
அந்த இடங்களில் மவுனத்தை நிரப்பி, திரைக்கதையில் ஆங்காங்கே படிந்துள்ள வெறுமையை அகற்றியிருந்தால், ‘காமி’ கொண்டாடத்தக்க ஒரு முயற்சியாக மாறியிருக்கும். அதனைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர் வித்யாதர் காகிடா. மற்றபடி, வழக்கமான தெலுங்கு மசாலா படங்களைப் பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு இப்படம் நிச்சயம் புத்துணர்வைத் தரும்!
மொத்தத்தில் இந்த காமி – ஒரு அகோரியின் ‘தேடல்’!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டின் ‘டாப் 3’ வெப்ப மாவட்டங்கள் இதுதான்!
செஸ் வரி மூலம் 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மடைமாற்றம்: அம்பலப்படுத்திய ஜெயரஞ்சன்
தேர்தல் பத்திரங்கள் வழக்கு: எஸ்பிஐ கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!