கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல் தொடர், தற்போது வெற்றிகரமாக 17வது சீசனை எட்டியுள்ளது.
இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடர்களில், பல வீரர்கள் பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால், அவற்றில் சில சாதனைகளை முறியடிப்பது கிட்டத்தட்ட அசாத்தியமாக பார்க்கப்படுகிறது.
அப்படியான 5 அசத்திய சாதனைகளின் பட்டியல் இதோ!
ஒரே சீசனில் 973 ரன்கள் விளாசிய விராட் கோலி
விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் ஒரு பொன்னான வருடமாக கருதப்படும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 4 சதங்கள், 7 அரைசதங்கள் என, விராட் கோலி அந்த தொடரில் மட்டும் 973 ரன்களை குவித்தார்.
இது கிட்டத்தட்ட முறியடிக்க முடியாத சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுப்மன் கில்லும், 2022ஆம் ஆண்டு ஜோஸ் பட்லரும் இந்த சாதனையை முறியடிக்க முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் 900 ரன்களை கூட எடுக்க முடியவில்லை. 2023 ஐபிஎல் தொடரில், 17 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 890 ரன்கள் சேர்த்திருந்தார்.
2022-ல் ஜோஸ் பட்லர் 863 ரன்களை குவித்திருந்தார். ஆச்சரியமாக, அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், பட்லர் 4 சதங்களை விளாசியிருந்தார்.
ஒரே போட்டியில் 175 ரன்கள் குவித்த கிறிஸ் கெய்ல்…
தற்காலத்தில் 20 ஓவர்களில் ஒரு அணி ஒட்டுமொத்தமாக 175 ரன்கள் குவிக்க திணறிவருகிறது.
ஆனால் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில், தனி ஆளாக 175 ரன்களை விளாசியிருந்தார் கிறிஸ் கெய்ல்.
முன்னதாக, பிரென்டன் மெக்கல்லம் 158 ரன்கள் விளாசி இருந்ததே சாதனையாக இருந்தது. இதற்கு பின், இதுவரை 10 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்ற நிலையிலும், யாராலும் அந்த எண்ணிக்கைக்கு அருகே கூட நெருங்க முடியவில்லை.
அந்த போட்டியில் வெறும் 30 பந்துகளில் சதத்தை கடந்தார் கிறிஸ் கெய்ல்.
மேலும், அதே போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263 ரன்கள் சேர்த்ததே, இதுநாள் வரை ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
விராட் கோலி – ஏபி டிவில்லியர்ஸின் 229 ரன்கள் பார்ட்னர்ஷிப்
2016 ஐபிஎல் தொடரில், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக, விராட் கோலி – ஏபி டிவில்லியர்ஸ் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 229 ரன்கள் சேர்த்ததே, இதுநாள் வரை ஒரு ஜோடி குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக உள்ளது.
முன்னதாக, இந்த இணை 2015-இல் மும்பை அணிக்கு எதிராக 215 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதை அவர்களே முறியடித்தனர்.
பின், 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் – குவின்டன் டி காக் ஜோடி இந்த இலக்கை தாண்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 210 ரன்கள் மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்தது.
அதிக முறை கேப்டனாக களமிறங்கிய தோனி
ஐபிஎல் வரலாற்றில், 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக களமிறங்கிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார், மகேந்திர சிங் தோனி.
அவர் இதுவரை 226 போட்டிகளில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். தற்போது, 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவரே கேப்டனாக களமிறங்க உள்ளார்.
தோனிக்கு அடுத்தபடியாக, 2-வது இடத்தில் ரோகித் சர்மாவும் (158 போட்டிகள்), 3-வது போட்டியில் விராட் கோலியும் (143 போட்டிகள்) உள்ளனர். ஆனால், இவர்கள் இருவருமே தற்போது கேப்டன் பதவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் மிஸ்ராவின் 3 ஹாட்-ட்ரிக்
16 ஆண்டுகால ஐபிஎல் வரலாறு இதுவரை மொத்தம் 22 ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை கண்டுள்ளது. அவற்றில், 3 ஹாட்-ட்ரிக்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் அமித் மிஸ்ரா. இவருக்கு அடுத்தபடியாக, யுவராஜ் சிங் 2 ஹாட்-ட்ரிக்களை பெற்றுள்ளார்.
வேறு யாருமே இதுவரை 2 ஹாட்-ட்ரிக்களை கூட பெற்றதில்லை என்ற நிலையில், அமித் மிஸ்ராவின் இந்த சாதனையும் மிக எளிதாக முறியடிக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வாழைப்பழ மில்க் ஷேக்
OnePlus-ன் புது வரவு…. விலை விவரம்! இதோ….
நாம் தமிழர் கட்சி சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!
4 புதிய மாநகராட்சிகள் : முதல்வர் அறிவிப்பு!