மனதை ஸ்தம்பிக்கச் செய்யும் த்ரில்லர்!
மாதவன், ஜோதிகா உடன் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் இணைந்து நடித்த படம் என்பதே ‘சைத்தான்’ மீது ஈர்ப்பு ஏற்பட முதல் காரணம். மாந்திரீகவாதியாகத் தோன்றும் மாதவனே இதில் வில்லன் என்று சொன்னது படத்தின் ட்ரெய்லர். அது மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற சில அம்சங்கள், மூளையைச் சில்லிட வைக்கும் ‘த்ரில்’ அனுபவத்துக்கு உத்தரவாதம் தரும் என்பதையும் சொன்னது.
உண்மையில் ‘சைத்தான்’ அப்படித்தான் இருக்கிறதா?
மகிழ்ச்சியான குடும்பம்!
தனது மனைவி ஜோதி (ஜோதிகா), மகள் ஜான்வி (ஜான்கி பொடிவாலா), மகன் துருவ் (அன்கட் ராஜ்) உடன் டேஹ்ராடூனில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் கபீர் (அஜய் தேவ்கன்). சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆகப் பணியாற்றிச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து வரும் அவர், தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பல கனவுகளைக் கொண்டிருக்கிறார்.
என்னதான் குழந்தைகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தாலும், அவர்கள் எந்த வகையிலும் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதில் அக்கறையுடன் கண்காணிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அந்த மனதுக்கு ஏற்றவாறு ஜோதியும், தனது குடும்பத்தைக் கண்களாகப் பாவிக்கிறார்.
வார இறுதியைக் கொண்டாடும் பொருட்டு, ஒருமுறை குடும்பத்தோடு பண்ணை வீட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார் கபீர். செல்லும் வழியில், ஒரு ரெஸ்டாரெண்டில் சில்லறை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொள்கிறார். அப்போது, அவருக்கு ஒரு நபர் உதவுகிறார். அதையடுத்து, அந்த நபரைத் தங்களுடன் தேனீர் குடிக்குமாறு கூறுகிறார் கபீர்.
தனது பெயர் வன்ராஜ் என்று அந்த நபர் (மாதவன்) அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அதேநேரத்தில், நெய் அதிகமுள்ள சப்பாத்தியைச் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி. அதனால், அவரிடம் துருவ் வம்பிழுக்கிறார்.
அப்போது, தன்னிடமுள்ள லட்டு ஒன்றை இருவரையும் நோக்கி நீட்டுகிறார் வன்ராஜ். அதனைத் துருவ் வாங்கும் முன்னர், ஜான்வி பிடுங்கி வாயில் போட்டுக் கொள்கிறார்.
அந்த லட்டைச் சாப்பிட்டதும் வினோதமாக உணர்கிறார் ஜான்வி. வன்ராஜ் சொன்னதை அப்படியே செய்யத் தொடங்குகிறார். எவ்வளவோ முயன்றும், அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
வன்ராஜ் சொன்ன காரணத்திற்காகவே, ஒரு துளி மிச்சமில்லாமல் அவர் தட்டில் உள்ள சப்பாத்தியைச் சாப்பிடுகிறார். அதனைக் கண்டும் காணாதது போல, வன்ராஜ் மகிழ்ச்சியடைகிறார்.
மகளின் செய்கைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் கபீரும் ஜோதியும் கூட, ஜான்வியின் செயல்பாட்டிலுள்ள வித்தியாசத்தை உணரவில்லை. அதன்பிறகு அவர்கள் நால்வரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
காரில் ஏறும் ஜான்வியிடம் ரகசியமாக ஒரு பிஸ்ட்கட் பாக்கெட்டைக் கொடுக்கிறார் வன்ராஜ். பண்ணை வீட்டுக்குச் சென்றதும் அதனைத் தின்று தீர்க்க வேண்டுமென்று கூறுகிறார்.
வன்ராஜ் சொன்னது போலவே, பண்ணை வீட்டில் நுழைந்ததுமே அந்த பிஸ்கட்களைச் சாப்பிடுகிறார் ஜான்வி. பின்னர் அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் துருவ், தந்தை, தாயுடன் விளையாடத் தொடங்குகிறார்.
அணிந்துவந்த உடை நனைந்த காரணத்தால், அதனை மாற்றுவதற்காகச் செல்லும் ஜோதி தங்களது வீட்டு வாசலில் வன்ராஜ் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். கபீரை உடனே அழைத்து விஷயத்தைச் சொல்கிறார்.
அவர்கள் வருவதற்குள், வீட்டுக்குள் வந்து உட்கார்கிறார் வன்ராஜ். மொபைல் போனில் சார்ஜ் இல்லாத காரணத்தால், அவர்களது வீட்டுக்கு வந்ததாகக் கூறுகிறார். அதனைக் கேட்டதும், தங்களிடமுள்ள சார்ஜரை கொடுக்கிறார் கபீர். அவருக்கு தேனீர் தருமாறு ஜோதியிடம் கூறுகிறார்.
உடை மாற்றிக் கொண்டு கபீர், ஜோதி, துருவ் மூவரும் வருவதற்குள், வன்ராஜிடம் பேசத் தொடங்கி விடுகிறார் ஜான்வி. தனது படிப்பு, பாய்ப்ரெண்ட், பெற்றோர் உட்பட அனைவரைக் குறித்தும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனைக் கேட்கும் ஜோதி, ‘முன்பின் தெரியாதவரிடம் ஏன் இத்தனையும் சொல்கிறாய்’ என்கிறார். அதற்கு, ‘உங்கள் மகள் சொல்லித்தான் நான் இங்கு வந்தேன்’ என்று சொல்கிறார் வன்ராஜ். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், மேற்கொண்டு கேள்வி கேட்காமல் அவரை அனுப்புவதிலேயே இருவரும் குறியாக இருக்கின்றனர்.
அதன்பிறகு வன்ராஜ் சொல்வதையெல்லாம் ஜான்வி ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்க, ஜோதியின் முகத்தில் பீதி பரவுகிறது. ‘அந்தாளுக்கு நம்ம பண்ணை வீடு இருக்குற இடம் எப்படி தெரிஞ்சது’ எனும் அவரது கேள்வி கபீரை உலுக்குகிறது. ஆனால், அவர்கள் சுதாரிப்பதற்குள் பிரச்சனை அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது.
வன்ராஜை வீட்டைவிட்டுப் போகுமாறு கபீர் சொல்ல, ’அவர் இங்குதான் இருப்பார்’ என்கிறார் ஜான்வி. அடம்பிடிப்பது போன்று ஒலிக்கும் அவரது குரல், ஒருகட்டத்தில் தந்தையையே தாக்கும் அளவுக்குச் செல்கிறது.
அதன்பிறகு வன்ராஜ் பேச்சைக் கேட்டு பெற்றோரையும் சகோதரரையும் தாக்கவும் அவர் தயாராகிறார். அப்போதுதான் அவரது பில்லிசூன்யத்திற்கு ஜான்வி ஆட்பட்டுள்ளதை அவர்கள் தெரிந்துகொள்கின்றனர்.
முகம் தெரியா அந்நியனின் கைப்பாவையாகத் தங்களது செல்ல மகள் இருக்கிறாள் என்பதை உணர்ந்தபிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் கபீரும் ஜோதியும் ஸ்தம்பித்து நிற்கின்றனர். அப்போது, ‘உங்களது மகளை எனக்குத் தானமாகக் கொடுத்துவிடுங்கள்’ என்கிறார் வன்ராஜ்.
அதனைக் கேட்டபிறகு அந்த பெற்றோர் ரியாக்ஷன் என்னவாக இருந்தது? தான் நினைத்ததைச் செயல்படுத்த, ஜான்வியை ஒரு கேடயமாக வன்ராஜ் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார்? இறுதியில் என்னவானது என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சைத்தான்’ படத்தின் மீதி.
‘யார் இந்த வன்ராஜ்’ என்ற கேள்விக்கு இத்திரைக்கதையில் நேரடியாகப் பதில்கள் இல்லை. ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஜான்வியின் செயல்பாடுகளே சொல்லிவிடும் வகையில் திரைக்கதை அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு. அந்த வகையில், இது ஒரு ‘சூப்பர்நேச்சுரல் சைக்காலாஜிகல் த்ரில்லர்’ ஆக நம்மை வசீகரிக்கிறது ‘சைத்தான்’.
சில்லிட வைக்கும் ‘த்ரில்’!
அஜய் தேவ்கன், ஜோதிகா, ஜான்கி மற்றும் அன்கட் ராஜின் அறிமுகக் காட்சிகளே, ஒரு மகிழ்ச்சியான உயர் நடுத்தரக் குடும்பத்தை நமக்குக் காட்டிவிடுகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்குமான சிறப்பம்சங்களும் கூட, முதல் பத்து நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது.
அதனால், திரைக்கதையின் நடுப்பகுதியில் அவர்கள் பயத்திலும் பதற்றத்திலும் உழலும் நிமிடங்கள் நம் மனதில் சட்டென்று தைக்கின்றன.
அஜய் தேவ்கன் பாத்திரம் படத்தில் அடக்கி வாசிக்கும்படியாகவே உள்ளது. வில்லனின் செய்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரது பாத்திரம் அடங்கிப்போவதாகக் காட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பில்லிசூன்யத்தால் ஒருவன் தனது மகளைக் கட்டுப்படுத்துகிறான் என்றதுமே அந்த தகப்பன் பொங்கி வெடிக்க வேண்டாமா’ என்ற சாதாரண ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவரது பாத்திரம் இல்லை. இப்படத்தின் மைனஸ்களில் அதுவும் ஒன்றாக விளங்குகிறது.
பதின்ம வயதுக் குழந்தைகளின் தாயாகத் தோன்றியிருக்கும் ஜோதிகா, அளவான நடிப்புடன் அசத்தியிருக்கிறார். அதிலும், மகள் ஆடையிலேயே சிறுநீர் கழித்ததை அறிந்து அதிரும் இடத்தில் அவரது நடிப்பு நம்மைப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது.
வில்லனாக வரும் மாதவன், படம் முழுக்க மிரட்டலான நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பும் உறுதிமிக்க உடல்மொழியும் அப்பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கின்றன.
துருவ் ஆக நடித்துள்ள அங்கட் ராஜ், குழந்தை நட்சத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பைத் தந்துள்ளார்.
’ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்’ போன்று இந்த படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக அள்ளியிருக்கிறார் ஜான்கி பொடிவாலா. ஜானவியாக வரும் அவரே, இக்கதையின் மையப்புள்ளி. அதற்கேற்றவாறு சிரித்து, அழுது, மிரட்டி, வெறுமையில் உழன்று நம்மைத் தன்வசப்படுத்தியிருக்கிறார்.
இவர்கள் ஐந்து பேர் தவிர்த்து, இக்கதையில் வரும் பாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளாக இதில் இடம்பெற்றவர்கள் எண்ணிக்கை சில நூறைத் தொடும்.
சுதாகர் ரெட்டி யக்கண்டியின் ஒளிப்பதிவு, எடுத்துக்கொண்ட கதைக்கேற்ப இருண்மை நிறைந்த பிரேம்களை அதிகம் காட்டியிருக்கிறது. பெரும்பாலான திரைக்கதை ஒரேவீட்டுக்குள் நிகழ்வதாகச் சொன்னாலும், பார்க்கும் நமக்கு அலுப்பு தட்டாமலிருக்க அவர் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
சந்தீப் பிரான்சிஸின் படத்தொகுப்பு, கனகச்சிதமாக ஷாட்களை அடுக்கியிருக்கிறது.
கரீமா மாத்தூரின் தயாரிப்பு வடிவமைப்பில் கிளைமேக்ஸ் காட்சிக்கான செட் மற்றும் பண்ணை வீடு செட் இரண்டும் பிரமிக்கும் வகையில் உள்ளன.
சுபாஷ் சாஹுவின் ஒலி வடிவமைப்பும், விக்ரம் மோர் மற்றும் ஆர்.பி.யாதவ்வின் ஆக்ஷன் கொரியோகிராபியும் இதில் சிறப்பாக அமைந்துள்ளன.
சண்டைக்காட்சிகளின்போது விஎஃப்எக்ஸ் குழுவினரின் உழைப்பு பிரமிக்கும் விதமாக உள்ளது.
முக்கியமாக, காதுகளை ஈர்க்கும் பாடல்களையும் பயத்தில் மனதை உறைய வைக்கும் பின்னணி இசையையும் தந்து அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அமித் திரிவேதி.
கிருஷ்ணதேவ் யக்னிக் இயக்கிய ’வாஷ்’ எனும் குஜராத்தி மொழிப் படத்தைத் தழுவி ‘சைத்தான்’ தந்திருக்கிறார் இயக்குனர் விகாஸ் பேஹ்ல். எழுத்தாக்கத்தில் அவருக்கு உதவியிருக்கிறார் ஆமில் கீயான் கான்.
விஎஃப்எக்ஸ், பின்னணி இசை, ஒலி வடிவமைப்பினால் மட்டுமே ‘ஹாரர்’ அனுபவத்தைத் தர முடியும் என்ற நியதியை மீறி, பில்லிசூன்யம் என்ற அம்சத்தை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மிரட்டியிருக்கிறது ‘சைத்தான்’. அந்த வகையில் ‘ஜான்வி’ எனும் பாத்திரத்தின் வினோதச் செயல்பாடுகளே நம்மைப் பயத்தில் ஆழ்த்தப் போதுமானதாக உள்ளது. ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே ‘ஓவர்டோஸ்” ஆகியிருப்பதுதான் இப்படத்தின் மைனஸாகவும் உள்ளது.
’ரீப்பீட் மோடு’ காட்சிகள்!
’தங்களது மகள் ஒரு அந்நியனின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள்’ என்பதைப் பெற்றோர் அறிய இரண்டொரு உதாரணங்களே போதுமானது. ஆனால், இத்திரைக்கதையில் ‘ஆடுறா ராமா’ என்று குரங்காட்டி வித்தை காட்டுவது போன்று அடுத்தடுத்து ஜான்கிக்கு மாதவன் உத்தரவிட்டுக் கொண்டேயிருப்பது ஒருகட்டத்தில் போரடிக்கிறது.
‘எதுவுமே செய்ய முடியாது என்றபோது வில்லனை இந்த பெற்றோர் ரெண்டு அப்பு அப்பலாமே’ என்று ரசிக மனம் வெதும்பும் அளவுக்குப் பொறுமையைச் சோதித்திருக்கிறார் இயக்குனர். அந்த ‘ரிப்பீட் மோடு’ காட்சிகளைச் சுருக்கியிருக்கலாம்.
இந்த திரைக்கதையின் வன்ராஜ் எனும் வில்லன் பாத்திரத்திற்கான முன்கதை எதுவும் சொல்லப்படவில்லை. போலவே, பில்லி சூன்யம் குறித்த விளக்கங்களைச் சொல்லாமல் ‘காலா ஜாதூ..’ என்று ஜோதிகா மிரட்சியடைவதோடு அது தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார் இயக்குனர்.
ஒருவேளை அப்படிப்பட்ட வசனங்களை இணைப்பது, அச்செயல்பாட்டை ஆதரிப்பதாகிவிடும் என்று நினைத்து அவர் தவிர்த்திருக்கலாம்.
இறந்துகிடக்கும் ஒரு எலியை ஒருவர் எடுத்துச் செல்வது போன்று படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் காட்டியிருக்கிறார் இயக்குனர் விகாஸ் பேஹ்ல். அது போன்ற ஷாட்களின் வழியே, தான் எடுத்துக்கொண்ட கதைக்குத் தேவையான விஷயங்களைப் பார்வையாளர்களுக்குச் சுருங்கச் சொல்லியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வழக்கத்திற்கு மாறான த்ரில்லர் வேண்டுமென்பவர்கள் ‘சைத்தான்’ படத்தைத் தாராளமாகக் காணலாம். ‘எனக்குக் கொஞ்சம் இளகிய மனம்’ என்றெண்ணுபவர்கள் இதனைத் தவிர்ப்பதே நல்லது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
”என் மடியில் கனமில்லை” : ED சோதனை குறித்து ஆதவ் அர்ஜூனா
’திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?’ : வீடியோ வெளியிட்டு கமல் பதில்!