உதவி இயக்குநர்களுக்கு நிலம் தந்த வெற்றிமாறன்

சினிமா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என எல்லா படங்களும் வணிக அடிப்படையில் வெற்றி பெற்ற படங்களே.

அவை கல்லாவை நிரப்பியதுடன் மட்டுமல்லாது இந்திய அரசு வழங்கும் தேசிய விருதுகளையும் வென்ற படங்களாகும்.

காக்காமுட்டை போன்ற படங்களைத் தயாரித்து அதிலும் வெற்றியோடு பல விருதுகள் என தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்துடன் பயணித்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்

வரும் மார்ச் 31ம் தேதி அவரது இயக்கத்தில் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த திரைப்படமான ’விடுதலை முதல் பாகம்’ வெளியாக இருக்கிறது.

அப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் வெற்றிமாறன் அதற்கு நடுவே அவரிடம் பணியாற்றும் சுமார் இருபத்தைந்து பேருக்கு சத்தமில்லாமல் செய்திருக்கும் உதவி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் அவரிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

’இந்த உதவியை எந்தவித சத்தமுமின்றி வெற்றிமாறன் செய்ய நினைத்தார். ஆனால் இதனை ஒரு நிகழ்ச்சியாக நடத்தவேண்டும் என்று உதவிபெறுபவர்கள் விரும்பியதைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜாவை சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு வீட்டு மனையை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள் படக்குழு வட்டாரத்தில்.

தாங்கள் இயக்கும் படங்களில் உலகம் வியக்கும் முற்போக்கு கருத்துகளை பேசும் இயக்குநர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் கூட அதனை கடைப்பிடிப்பதில்லை. பெரும்பாலும் படத்தில் பேசியதற்கு நேர் எதிராகவே அவர்களுடைய நிஜ வாழ்க்கை இருக்கும்.

ஆனால், வெற்றிமாறன் திரைப்படங்கள் எடுப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் திரைத்துறைக்குள் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமின்றி நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளிலும் தம் கருத்தைப் பதிவு செய்வது, அதற்கான போராட்டங்களில் பங்கு பெறுவது என்று சமுதாயப் பொறுப்பையும்  நிறைவேற்றி வருகிறார்.

திரைப்படத்துறையில் எளிய குடும்பத்தைச் சார்ந்த திறமை வாய்ந்தவர்களும் பங்கேற்கும் வண்ணம் பயிற்சிப்பட்டறை நடத்தி வருகிறார்.

இப்போது உதவி இயக்குநர்களின் வாழ்நாள் கனவான சொந்தவீடு என்பதற்கு வடிவம் கொடுத்திருப்பது திரைத்துறை வட்டாரங்களில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இராமானுஜம்

நாங்கள் பேசுவதே போராட்டம் தான்: கார்த்தி சிதம்பரம்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *