Singappenne Movie : சிங்கப்பெண்ணே – திரை விமர்சனம்!
ட்ரையத்லான் குறித்த ஒரு அறிமுகம்
விளையாட்டை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது இன்று சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனாலும் கபடி, கிரிக்கெட், ஹாக்கி என்று மிகச்சில விளையாட்டுகளை முன்வைத்தே அப்படங்கள் அமைந்திருந்தன. கதையமைப்பும் காட்சிகளும் கதாபாத்திர வடிவமைப்பும் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானம் பொருந்திப் போகும் வகையிலேயே அவை இருந்தன.
’விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களுக்கான பார்முலா இதுதான்’ என்ற எண்ணம் எளிதாக ஏற்படும் வகையில், குறிப்பிட்ட வடிவத்திலேயே அமைந்தன. இந்தச் சூழலில் தான் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் ஒரு வீராங்கனையின் இன்னல்களைச் சொல்லும் வகையில் ‘சிங்கப்பெண்ணே’ ட்ரெய்லர் வெளியானது.
விளையாட்டுப் படங்களுக்கான பார்முலாவில்தான் அப்படம் உள்ளதா, இல்லையா எனத் தீர்மானிக்க முடியாத வகையில் அது இருந்தது. ஜேஎஸ்பி சதீஷ் இயக்கத்தில். ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, ஏ.வெங்கடேஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான அப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
விளையாட்டு சார்ந்த இதர படங்களில் இருந்து இந்தப் படம் எந்த வகையில் வேறுபடுகிறது?
வழக்கமான கதை
தென்காசியைச் சேர்ந்தவர் ஷாலினி (ஷில்பா மஞ்சுநாத்), சிறு வயது முதலே நீச்சல் போட்டிகளில் சிறந்து விளங்குகிறார். ஆனால், ஊரில் செல்வாக்குமிக்கவராக இருக்கும் அவரது தந்தைக்கு (ஏ.வெங்கடேஷ்) அதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை.
ஆறுகளில், குளங்களில் ஷாலினி நீச்சலுடையுடன் பயிற்சி செய்வதை ஊரார் கிண்டலடிக்க, ‘போதும் உனது நீச்சல் ஆர்வம்’ என்று தடை போடுகிறார். ஆனாலும், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாநில விளையாட்டுத் துறை சார்ந்த நீச்சல் போட்டிக்கான ஆணையத்தில் ஒரு பயிற்சியாளராகச் சேர்கிறார் ஷாலினி.
தனது வழிகாட்டுதலின் கீழ் எண்ணற்ற எதிர்கால வீரர், வீராங்கனைகளை உருவாக்குகிறார். ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்லும் ஷாலினி, அங்கு தேன்மொழி (ஆர்த்தி) என்ற சிறுமி ஓட்டத்திலும், சைக்கிள் ஓட்டுதலிலும், நீச்சலிலும் ஆர்வமிக்கவராக இருப்பதைப் பார்க்கிறார். அவரது திறன் ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது.
ஷாலினியின் வீட்டில் சமையல் வேலைகள் செய்து வருகிறார் தேன்மொழியின் பாட்டி. திடீரென்று அவர் இறந்துபோக, 18 வயது பூர்த்தியாகாத தேன்மொழிக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர் உறவினர்கள். அவர்களோடு சண்டையிட்டுத் தனது வீட்டுக்கு அழைத்துப் போகிறார் ஷாலினி.
J Baby : ஜெ பேபி – திரை விமர்சனம்!
பின்னர் சென்னைக்கு அழைத்துச் சென்று, அவரை ஒரு பள்ளியில் சேர்த்து, தான் பணியாற்றும் மையத்தில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தயார்படுத்துகிறார். தொடக்கத்தில் நீச்சலுடை அணிய வெட்கப்பட்டு பயிற்சியில் இருந்து நழுவ முயலும் தேன்மொழியை ஷாலினியின் தைரியமான வார்த்தைகள் மாற்றுகின்றன.
வெகு விரைவாக, இதர போட்டியாளர்களைக் காட்டிலும் தான் திறமை மிக்கவர் என்பதை நிரூபிக்கத் தொடங்குகிறார் தேன்மொழி. அது, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கண்களை உறுத்துகிறது. ஏனென்றால், தன் மகளை மாநிலப் போட்டிகளில் வெற்றி பெற வைத்து, அதன் வழியே ஐஐடியில் அவரை இடம்பிடிக்கச் செய்ய அவர் திட்டமிடுவது தான் காரணம்.
மகளின் வெற்றிக்காக, தேன்மொழியைப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்கான குயுக்திகளை அந்த அதிகாரி மேற்கொள்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே, தேன்மொழி தோல்வியுறுகிறார். கூடவே, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாலினியின் வேலையும் பறி போகிறது.
மிகச்சில நாட்களிலேயே அந்த வேதனையில் இருந்து வெளிவரும் ஷாலினி, மெல்ல தேன்மொழியையும் மீட்டெடுக்கிறார். சிறுவயதில் தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தாமோதரன் மூலமாக ட்ரையத்லான் போட்டிகளுக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார். அதில் தேன்மொழியையும் பங்கேற்க வைக்கிறார்.
ஒருநாள் பயிற்சியை மேற்கொள்ளச் செல்லும் வழியில், ஒரு விபத்தில் சிக்குகிறார் தேன்மொழி. கடுமையான பிரயத்தனங்களுக்குப் பிறகு காயங்கள் குணமானாலும், அதீத சத்தம் அவரை மனதளவில் பலவீனமாக்குகிறது; மயக்கமுறச் செய்கிறது.
அதிலிருந்து மீண்டு வந்து ‘டரையத்லான்’ போட்டிகளில் தேன்மொழி சாதித்தாரா? இல்லையா?என்று சொல்கிறது ’சிங்கபெண்ணே’வின் மீதி. விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கே உரிய வழக்கமான கதை என்றபோதும், நீச்சல் தொடர்பான விஷயங்கள் படத்தில் புதிதாகத் தெரிகின்றன.
தெரியாதவர்க்கு தெளிவான விளக்கங்களைத் தருவதோடு, நீச்சல் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தளிர்களின் மனதில் விதைக்கும் வகையிலும் இருப்பதே இப்படத்தின் சிறப்பு.
நல்லதொரு முயற்சி
‘சிங்கப்பெண்ணே’வில் நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சீனியர் நாயகர்கள் செய்யத் துணிகிற பாத்திரத்தை ஏற்று திரையில் அதற்கு நியாயம் செய்திருக்கிறார். மிகச்சில இடங்களில் அவரது தோற்றம் கவர்ச்சிகரமாகத் தென்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
தேன்மொழியாக வரும் ஆர்த்தி, உண்மையிலேயே ஒரு ட்ரையத்லான் வீராங்கனை. அதோடு, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். அதுவே திரையில் அவரது பங்களிப்பை வெகு எளிதாக நாம் ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. அதேநேரத்தில், முக்கியமான காட்சிகளில் அவரது நடிப்பு நமக்குத் திருப்தியை வழங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அவரது மனைவியாக நடித்தவருக்கு இரண்டொரு காட்சிகளையே தந்திருக்கிறார் இயக்குநர். அதன்பின் முழுமையாகத் திரைக்கதை விளையாட்டுக்களத்தைச் சுற்றியே நகர்கிறது. போலவே ‘பசங்க’ சிவகுமார், சென்றாயன் போன்றவர்களும் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கின்றனர்.
மகளை முதலிடம் பெற வைக்கத் துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரியாக வரும் பிரேம்குமார், ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும் அளவுக்கு நடித்திருக்கிறார். அவருடன் வரும் பயிற்சியாளரும் ஆணைய உறுப்பினராக வருபவரும் கூட அது போன்றதொரு நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
பாராலிம்பிக் நீச்சல் சாம்பியனான மாதவி லதா இதில் ஒரு காட்சியில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். அந்தக் காட்சியில் நடித்ததோடு, தொடக்கத்தில் வரும் வாய்ஸ் ஓவருக்கும் குரல் தந்திருக்கிறார் சமுத்திரக்கனி. அக்காட்சி நிச்சயம் தன்னம்பிக்கை ‘டானிக்’ ஆக இருக்கும்.
Thangamani : தங்கமணி – திரை விமர்சனம்!
கிளைமேக்ஸில் வரும் ட்ரையத்லான் போட்டிக்கான காட்சிகளில் பெரும்பாலும் உண்மையான வீரர், வீராங்கனைகளைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜேஎஸ்பி சதீஷ். நாயகியாக வரும் ஆர்த்திக்கு அவ்வனுபவம் உண்டு என்பதால், திரையில் அது ‘துருத்தலாக’ அமையவில்லை.
படத்தில் ஒப்பனையும், ஆடை வடிவமைப்பும் குறை சொல்லும்படியாக இல்லை. நீச்சலுடையைத் திரையில் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ காட்டாமல் தவிர்த்த காரணத்திற்காகவே அவர்களுக்கு ‘சபாஷ்’ சொல்லலாம்.
யதார்த்தத்தை மீறி, மிகையான ஒளிக்கலவையுடன் சில காட்சிகள் அமைந்தாலும் திரைக்கதையுடன் நாம் ஒன்ற அது தடையாக அமையவில்லை. ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்தின் பல்லாண்டு கால அனுபவம் அதற்கு உதவியிருக்கிறது.
திரையில் கதை சொல்லத் தேவையான காட்சிகளை மட்டுமே நமக்குக் காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். பின்பாதியில் ஒரு காட்சியில் மட்டும் ஷில்பாவை நீச்சலுடையில் ‘ஸ்லோமோஷனில்’ நடக்க வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
மற்றபடி, இந்த படத்தைப் பார்க்கும் பெற்றோர் தமது குழந்தைகளை நீச்சல் போட்டிகளில் பங்கேற்க வைக்கலாம் என்று முனையும் அளவுக்குத் திரையில் அக்காட்சிகளைக் கண்ணியமாகக் காட்டியிருக்கிறது அவரது படத்தொகுப்பு.
வழக்கம்போல, விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படத்தைத் தாங்கிப் பிடிக்கப் பின்னணி இசையும் வசனங்களும் பக்கபலமாக அமைய வேண்டும். அந்த வகையில், இதில் குமரன் சிவமணியின் பின்னணி இசை நமக்குள் துடிப்பை அதிகப்படுத்துகிறது. பாடல்களும் கேட்கும்படியாக உள்ளன.
‘நீர் கூட நாம பேசுற மொழியே நீச்சல்’ என்பது போன்ற கபிலன் வைரமுத்துவின் அழுத்தமான வசனங்கள் நம்மைத் திரையை நோக்கி ஈர்க்கின்றன; அது மட்டுமல்லாமல், விளையாட்டுக் களத்தைச் சுற்றியிருக்கும் அரசியலையும் தோலுரித்திருக்கின்றன அவரது வசனங்கள்.
நரம்புகளைப் புடைக்க வைக்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்படுத்தும் எவ்விதத் திருப்பங்களும் இல்லாத, மிகையான சித்தரிப்புகள் அற்ற, வெறுமனே ட்ரையத்லான் என்ற போட்டி வடிவத்துக்கு முக்கியத்துவம் தருகிற வகையிலான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஜேஎஸ்பி சதீஷ். அந்த வகையில் இது நல்லதொரு முயற்சி!
குழந்தைகளுக்கானது
ஆடுகளம், ஓடுகளம் போன்று நீச்சல் குளத்தை குழந்தைகளுக்குக் காட்டி ஊக்கப்படுத்துவோர் மிக அரிது. அந்த வகையில், நீச்சல் போட்டிகள் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது ‘சிங்கப்பெண்ணே’.
பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் சித்திரமாகவும் உள்ளது. அதனால் பள்ளிச் சிறார்களுக்கு இப்படத்தை நாம் ஒரு பாடமாக முன்வைக்கலாம்.
ட்ரையத்லான் என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் மூன்றையும் கொண்டது. அதனை உணர்த்தும் விதமாக, டைட்டிலில் ‘சிங்கப்பெண்ணே’வில் உள்ள ஒற்றுகளை அவற்றின் ’மினியேச்சர்’ ஆக வடிவமைத்திருப்பது அழகு.
தொடக்கக் காட்சியும் இறுதிக் காட்சியும் ஒரேமாதிரியானதாக அமைத்திருப்பது திரைக்கதையை இயல்பானதாக மாற்றியிருக்கிறது. இது போன்ற ப்ளஸ் பாயிண்டுகளே க்ளிஷேவான, அயர்ச்சியூட்டுகிற, மிக மெதுவாக நகர்கிற சில காட்சிகளைப் புறந்தள்ளி ‘சிங்கப்பெண்ணே’வை ரசிக்க வைக்கின்றன.
அந்த வகையில் இயக்குனர் ஜேஎஸ்பி சதீஷின் முயற்சியை வரவேற்கலாம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Chennai: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
எலக்ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!
Heatwave : அதிகம் ‘வெயில்’ அடிக்குறது இங்கதான்!