கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் பலமடங்காக அதிகரித்து வருகிறது. கிராமத்தில் உள்ள பெட்டிக்கடை முதல் நகரங்களில் உள்ள பெரிய மால்வரை எங்கும் டிஜிட்டல் பணவரித்தனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்தது. இதனால் கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி இன்று (ஜனவரி 31) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35A-ன் கீழ் ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (PPBL) செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பின்னர் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.
வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம்.
பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும். பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர வேறு எந்த ‘வங்கி’ செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது. அதேவேளையில் பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா