ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மே 19, 2024 ஞாயிறு அன்று ஈரான் – அசெர்பைஜான் எல்லையில் அசெர்பைஜான் நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இரண்டு அணைகளை திறந்து வைத்தார் இப்ராஹிம் ரைசி. அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனும் சென்றிருந்தார்.

மொத்தம் 3 ஹெலிகாப்டர் கான்வாய்களில் ஈரானிலிருந்து அதிபர், அமைச்சர்கள் என பலரும் சென்றுள்ளனர். பெல் 212 ஹெலிகாப்டர் என்ற வகை ஹெலிகாப்டரே அவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர், கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஆளுநர், ஒரு பைலட், கோ பைலட், ஃப்ளைட் டெக்னீசியன் என மொத்தம் 9 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மூன்று ஹெலிகாப்டர்களும் அசர்பஜைனாலிருந்து புறப்பட்டு, ஈரானுக்கு திரும்பிய போது, ஒரு ஹெலிகாப்டர் கான்வாய் மட்டும் மதியம் 1 மணியளவில் ஈரானின் வடமேற்கு மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் தான் ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்தனர்.

முதலில் இந்த ஹெலிகாப்டர் சரியாக எந்த இடத்தில் விழுந்தது, உள்ளே இருந்த அதிபர் மற்றும் மற்றவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. ராணுவத்தின் ட்ரோன்களைப் பயன்படுத்தியும் 40 ரெஸ்க்யூ டீம்கள் மூலமும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரைத் தேடும் சர்ச் ஆபரேஷன் நடத்தப்பட்டது.
முதலில் அதிபர் ரைசியுடன் இருந்தவர்கள் ஹெலிகாப்டருக்கு உள்ளே இருந்து எமெர்ஜென்சி கால் செய்வதற்கு முயற்சித்துள்ளனர் என்று டாஸ்னிம் எனும் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் அடர்த்தியான காடாக இருந்ததாலும், கடும் பனி காரணமாகவும் ஹெலிகாப்டர் உடைந்த பகுதிக்கு செல்வதற்கு மீட்புக் குழுக்களுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது.
ஹெலிகாப்டர் சரியாக ஈரான் – அசர்பைஜான் எல்லையில் உள்ள டிஸ்மர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விழுந்துள்ளது. அந்த பகுதியில் திடீரென நடந்த வானிலை மாற்றம் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே கன மழை மற்றும் அடர்ந்த பனியின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
Islamic Revolutionary Guard Corps கமாண்டர் ஒருவர், ”விபத்து நடந்த பிறகு ஹெலிகாப்டரிலிருந்து ஒரு சிக்னல் கிடைத்தது. அதேபோல் அந்த டீமில் இருந்த ஒருவரின் மொபைல் சிக்னலைப் பயன்படுத்தியும் சரியான லொகேஷனைக் கண்டுபிடித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் சென்ற ஹெலிகாப்டரைத் தவிர மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களான ஈரானின் எனர்ஜி மினிஸ்டர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளன.
ஈரான் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் செர்கேய், ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்தது என்று கண்டறியும் ஈரானின் விசாரணைக்கு உதவுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்ராஹிம் ரைசி உயிருடன் இருக்கிறாரா என்று தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த நிலையில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் முழுவதுமாக எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பல பரபரப்புகளை ஈரானில் ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஈரானில் 2021 ஆம் ஆண்டு அதிபராக இப்ராஹிம் ரைசி வந்து அமர்ந்ததற்குப் பிறகு, வெளியுறவுக் கொள்கையில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் உலக வல்லரசுகளை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. மேற்கு ஆசியாவின் களம் மாறிக் கொண்டிருக்கிற மிக முக்கியமான காலக்கட்டத்தில் இப்ராஹிம் ரைசியின் மரணம் நிகழ்ந்திருப்பது ஈரானுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
யார் இந்த இப்ராஹிம் ரைசி?
யார் இந்த இப்ராஹிம் ரைசி அவருடைய பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.
இப்ராஹிம் ரைசி 1960 ஆம் ஆண்டு வடமேற்கு ஈரானின் மாஷாத் நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே இஸ்லாம் சார்ந்த ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். மாணவப் பருவத்திலேயே 1979ல் நடைபெற்ற ஈரானின் இஸ்லாமியப் புரட்சியில் பங்கேற்றார். 20 வயதில் ஈரானின் பல மாநகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1988 ஆம் ஆண்டு ஈரானின் சிறையில் இருந்த அரசியல் கைதிகளின் மரண தண்டனை குறித்து மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் ஒரு அங்கமாக ரைசி இருந்தார். ஏராளமான அரசியல் கைதிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் காரணமாக இப்ராஹிம் ரைசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலைக் காராணம் காட்டி அமெரிக்கா இப்ராஹிம் ரைசி மீது பல தடைகளைக் கொண்டு வந்தது.
ஈரானின் சுப்ரீம் லீடர்களுக்கு நெருக்கமான ரைசி

ஈரானில் சுப்ரீம் லீடர் ஆஃப் ஈரான் என்ற ஒரு பதவி இருக்கிறது. நாட்டின் அதிபரைக் காட்டிலும் அரசியல் விவகாரங்களிலும், மத விவகாரங்களிலும் உச்ச அதிகாரம் பெற்றவர் இந்த சுப்ரீம் லீடர் தான். இந்த பொறுப்பில் இருப்பவர் தான் நாட்டின் தலைவர் ஆவார். ஈரானின் முதல் சுப்ரீம் லீடரான அயாத்துல்லா கோமெனி-யின் மறைவுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு வழக்கறிஞராக ரைசி நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது சுப்ரீம் லீடரான அலி காமெனி-யின் கீழ் இப்ராஹிம் ரைசி படிப்படியாக வளர ஆரம்பித்தார். 2004 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் இப்ராஹிம் ரைசி ஈரானின் துணை தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்தார்.
2017 தேர்தலில் தோல்வி
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி அப்போது அதிபராக இருந்த ஹசன் ரோஹானியை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் ரைசி தோல்வியடைந்தார். ஆனால் அத்தோடு அவர் நிற்கவில்லை.
2019 ஆம் ஆண்டு சுப்ரீம் லீடர் அலி காமெனி, ரைசியை ஈரானின் தலைமை நீதிபதியாக நியமித்தார். இந்த நியமனம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 62% வாக்குகளைப் பெற்று இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார். அடுத்த சுப்ரீம் லீடராக இப்ராஹிம் ரைசி தான் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஈரான் – இஸ்ரேல் மோதல்கள்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் சிரியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதில் ஈரானின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இரண்டு வாரங்களில் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மூலமாக தாக்குதல்களை இப்ராஹிம் ரைசி நடத்தினார். உலகம் முழுதும் பரபரப்பாக பார்க்கப்பட்ட இந்த தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று அறிவித்தார் ரைசி. அதுவும் ஐ.நாவின் விதிகளுக்கு உட்பட்டுதான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்றும் ஈரான் அறிவித்தது.
இதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தும்பட்சத்தில் மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளும் அபாயம் இருப்பதாகப் பார்க்கப்பட்ட சூழலில் பதில் தாக்குதல்கள் எதுவும் இஸ்ரேல் நடத்தவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடந்த சில வாரங்களில் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருப்பதையொட்டி இஸ்ரேலை மையப்படுத்தி பல பேச்சுகள் எழுந்திருக்கின்றன. ஆனால் ஈரான் அரசாங்கம் இந்த விபத்திற்கு பின்னால் சதித்திட்டம் எதுவும் இருப்பதாக இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க செனேட்டர் ஒருவரின் ரியாக்சன்
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் செனேட்டராக இருக்கும் ரிக் ஸ்காட் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”ரைசி இறந்திருந்தால் இந்த உலகம் இப்போது பாதுகாப்பான நல்ல உலகமாக இருக்கும்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
If Raisi is dead, the world is now a safer & better place.
That evil man was a tyrant & terrorist. He was not loved or respected & he will be missed by no one. If he’s gone, I truly hope the Iranian people have the chance to take their country back from murderous dictators.
— Rick Scott (@SenRickScott) May 19, 2024
பல அரசியல் மாற்றங்கள் உலகம் முழுவதும் ரைசியின் மறைவையொட்டி இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : கோவையில் என்.ஐ.ஏ ரெய்டு!
share market: சில்லரை முதலீட்டாளர்களுக்கு சாதகமான பங்குகள் இதோ…