சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய சொகுசு எலெட்ரிக் காரை இந்தியாவில் இன்று (ஜனவரி 19) அறிமுகம் செய்துள்ளது.
இனி எலெக்ட்ரிக் கார்கள், பைக்குகள் தான் வாகன உலகின் எதிர்காலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன.
அந்த வகையில் உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், தன்னுடைய சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் சொகுசு காரின் ஆரம்ப விலை ரூபாய் 7.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 53௦ கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு 34 நிமிடங்களிலேயே 80% சார்ஜ் ஆகும் வகையில் பேட்டரிக்கள் உள்ளன. பிக்-அப் திறனை பொறுத்தவரை ௦-1௦௦ கிலோமீட்டர் தூரத்தை வெறும் 4.5 நொடிகளில் கடக்கலாம்.
21 இன்ச் அலாய் வீல்களால் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் மொத்த எடை 2975 கிலோ. காரானது 2,080 மில்லி மீட்டர் அகலமும், 5,453 மில்லி மீட்டர் நீளமும், 1,559 மில்லி மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது.
தற்போது டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் சென்னையில் வரும் 23-ம் தேதி அறிமுகமாகிறது.
வருகின்ற 2030-ம் ஆண்டிற்குள் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கும் அனைத்து கார்களும், எலெக்ட்ரிக் முறையில் இயங்குவதாக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் ஃபர்ஸ்ட் லுக்!