ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல தடையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தல் தேதியை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதனால் ஆவணம் இன்றி ரூ.50,000க்கு மேல் யாரும் பணம் மற்றும் தங்கநகை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக வாகனங்களில் ஆவணமின்றி எடுத்துசெல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் அலுவரிடன் ஒப்படைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து நடத்தை விதிமுறைகளை தளர்த்த கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் அண்டை மநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தேர்தல் முடியாததால் நடத்தை விதிமுறைகள் அகற்றபடுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
உள்மாவட்டங்களில் அனுமதி!
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, “தேர்தல் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன.
எனினும் தேர்தல் நடைபெற உள்ள அண்டை மாநிலங்களை ஒட்டி இருக்கும் திருவள்ளூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனை இருக்கும்.
அண்டை மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும், எல்லை மாவட்டங்களில் இருக்கும் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களும் திரும்ப பெறப்படும்” என்று தெரிவித்தார்.
வணிகர் சங்கம் நன்றி!
இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தேர்தல் முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறுபரிசீலனை செய்யக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே, நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்கிறோம். தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணிகளில் துணையிருந்து பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என ஏ.எம். விக்கிரமராஜா கூறியுள்ளார்.
தங்க நகைக்கு இனி தடையில்லை!
அதே போன்று சித்திரை, வைகாசி மாதங்களில் நடத்தப்படும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்க நகை வாங்குவது வழக்கம்.
ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறையால் பணத்தை கொண்டு செல்ல முடியாமலும், நகைகளை வாங்க முடியாமலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையரின் அறிவிப்பால் பொதுமக்களும் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… பக்தர்கள் பரவசம்!
சொத்து வரி: ஏப்ரல் 30-க்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி… தவறினால் 1% வட்டி!