மதுரை சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 மாடிகள் கொண்ட பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாக கட்டிடம் அமைந்துள்ளது. சமீபத்தில் தான் இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குப் பொருட்களை வாங்குவதற்காக வருவதுண்டு. இந்த சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் 9-வது மாடியில், கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உணவு வழங்குவதற்காக ஃபுட் கோர்ட் செயல்பட்டு வருகிறது.
இந்த ஃபுட் கோர்டில் சுமார் 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதை அடுத்து கடையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக கடையை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், தீ மற்ற தளங்களுக்கு பரவாமல் இருப்பதை தடுக்கும் முயற்சியிலும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவசர உதவிக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தயார் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் 3 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோனிஷா
முடங்கிய ட்விட்டர்: ட்ரெண்ட் ஆகும்
நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் – அண்ணா பல்கலை மறுப்பு: நீதிபதி விளக்கம்!