தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் இன்று (மே 5) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைகழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
நாளை தொடங்கும் இந்த விண்ணப்பப்பதிவு ஜூன் 27ஆம் தேதி வரை நடைபெறும். www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…