குழந்தைகளிடம் தீண்டாமை : கடைக்கு சீல் வைப்பு, ஒருவர் கைது!

Published On:

| By Kalai

சங்கரன்கோவில் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கட்டுப்பாடு விதித்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியல் இன சமுதாய பள்ளி குழந்தைகளுக்கு கடைகளில் திண்பண்டம் கொடுக்கக்கூடாது என்று ஊர்கூடி கூட்டம் போட்டு முடிவெடுத்துள்ளதாக ஒருவர் கடையினுள் இருந்து கூறுகிறார்.

குழந்தைகள் என்ன கட்டுப்பாடு என்று கேட்கிறது. உங்களுக்கெல்லாம் கொடுக்க கூடாதுன்னு ஊர்கூட்டம் கூட்டி முடிவு எடுத்துருக்காங்க.

உங்க வீட்டுலயும் போய் சொல்லுங்க என்று சொன்னதும் எதற்கென்றே புரியாதபடி அங்கிருந்து அந்த குழந்தைகள் நகர்ந்து செல்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் அதே கடையில் இருந்து மற்றொரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

அதில் கடைக்கு வரும் இரண்டு பெண்களிடம் அதே கடைக்காரர், இனிமேல் இந்தக் கடைக்கு நீங்கள் வரவேண்டாம் என்று சொல்கிறார்.

அவர் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து அந்தப் பெண்ணும் சிரிக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் அழுத்தம் திருத்தமாக இந்த தெருவில் எந்த கடைக்கும் நீங்கள் வரக்கூடாது என்று சொல்லி முடிக்கிறார்.

இந்த வீடியோக்களை பார்த்த பலரும், இந்த வீடியோ ஆதாரம் போதுமானது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கக் தொடங்கினர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர்.

மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர மூர்த்தி என்பவரை நல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

இதில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கலை.ரா

பெரியார் உலக மக்களுக்கான தலைவர் : முதல்வர் ஸ்டாலின்

பெரியார் படத்தை கையோடு தூக்கிச் சென்ற எடப்பாடி தரப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share