மழை, வெள்ளம்: மூன்றாவது நாளாக ரயில் நிலையத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள்!
தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் மூன்றாவது நாளாக சிக்கி தவிக்கின்றனர்.
நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது.
இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
500 பயணிகள் ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை தொடர்புகொள்ளும் அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் இன்று (டிசம்பர் 19) காலை உணவு வழங்கப்பட்டது. மூன்றாவது நாளாக சிக்கித்தவிக்கும் பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சீனியர் சிட்டிசன்களுக்கு: ஃப்ரீ பஸ் டோக்கன்கள்: பெறுவது எப்படி?
நெல்லை பேருந்து நிலையத்தில் படிப்படியாக வடியும் வெள்ளம்!