தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

தமிழகம்

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 2008-ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, முன்னாள் முதல்வர் கலைஞரால் 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56,933 ஏக்கர்) பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்

இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முடி கொட்டிய பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது: எம்.எஸ்.பாஸ்கர்

தென் மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *