கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
அதுமட்டுமின்றி தனது மகளின் மரணத்திற்கு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்கு ஒப்படைக்கப்படவில்லை என்று காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு இன்று (நவம்பர் 14) விசாரணைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் செல்போன் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி கூட பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பில், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்ஃபோனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமானால் செல்போனை புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்ஃபோன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவி மரணம் தொடர்பான விசாரணை நிலை மற்றும் கலவரம் தொடர்பான விசாரணை நிலவரம் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகவே குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரது அல்லது குற்றம் செய்தவர்களது செல்போன்கள் மிக்கபெரும் ஆதாரங்களாக கருதப்படுகின்றன. கடைசியாக யாருடன் எப்போது தொடர்புகொண்டார்கள், உரையாடல்கள், வாட்ஸ் அப் மெசேஜுஸ்கள், ஸ்டேட்டஸுகள் என எல்லாமே ஆதாரமாக ஆகின்றன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என போலீஸாரால் எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
அல்லாஹு அக்பர் கோஷம் : மாணவர் மீது தாக்குதல்!
குழந்தைகள் தினம்: இதயங்களை கவர்ந்த வீடியோ!