பொங்கல் பரிசு: இன்று முதல் விநியோகம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு எப்போது ?

தமிழகம்

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் பொங்கல் பரிசு ரூ. 1,000 இன்று (ஜனவரி 9 ) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ரூ. 2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

பின்னர், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை வரை 94 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ஏற்கனவே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. நேற்று முதல் கரும்பு, ரொக்கப்பணம் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ( ஜனவரி 9 ) சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்பு தாரர்களுக்கு, ரூ. 1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் விநியோகிக்கிறார்.

டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் 12 ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள் 13 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திராவிட இந்தியா: சேஷைய்யங்கார் சொல்வதையாவது கேட்பாரா ஆளுநர்?

என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் : ஹர்திக் பாண்டியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *