திருச்சியில் சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 29) அறிவித்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு, மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வரோடு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சராகப் பொறுப்பேற்று முதல்முறையாகத் திருச்சி வந்திருக்கிறேன்.
பிற மாநிலங்களிலும் சுய உதவிக்குழுக்கள் கொண்டுவரப்பட்டதற்குத் தமிழகத்தில் கலைஞர் உருவாக்கிய இந்த திட்டம்தான் காரணம்.
கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தைக் கொண்டு போய் சேர்த்தார்” என சுய உதவிக்குழு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து, புதுமைப் பெண் திட்டம் என மகளிருக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசினார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து ரூ.238 கோடி மதிப்பில் 5,635 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர்களுக்கு புகழாரம்
இதன்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “திருச்சியில் எது நடந்தாலும் அது பிரம்மாண்டமாகத்தான் நடக்கும். சிறிய விழாவாக இருந்தாலும் பெரிய அரசு விழாவாக நடக்கும்.
மாநாடு என்று அறிவித்தால் பிரம்மாண்டமான மாநாடாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால் அது திருச்சி. அப்படி நடத்தினால் அதுதான் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு.
நிர்வாகத் துறை மூலமாகத் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் நேரு செய்து வருகிறார். அரசு நிகழ்ச்சி என்று தேதி வாங்கி அரசு மாநாடாக இதை நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மணப்பாறை மொண்டிப்பட்டியில், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2ஆவது அலகினையும். மணப்பாறை சிப்காட் வளாகத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறேன். இவை இரண்டும் திருச்சிக்கு முக்கியமான சாதனைகள்.
தமிழகத்தின் தொழில்துறை மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கியிருக்கிறது.
மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல உலகளவில் இருக்கும் தொழிற்சாலைகளும் வந்துகொண்டிருக்கின்றன.
புதிய புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். இதைக் கடமையாகக் கண்ணாக நினைத்துச் செயல்படுத்தி வருகிறார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு.
சிப்காட் திறப்பு விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியைச் சந்திக்க சன்னாசிபட்டி என்ற கிராமத்திற்குச் செல்ல இருக்கிறேன்.
ஒரு கோடி பேருக்குச் சிகிச்சை அளித்திருப்பது சாதாரண சாதனை அல்ல. மாரத்தான் ஓட்டம் போல நெடிய தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்த சாதனை.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்ட வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சாலைகளில் மட்டுமல்ல துறையின் செயல்பாடுகளிலும் நெடுந்தூரம் களைப்பின்றி பயணித்து இலக்குகளை அடைந்து காட்டக்கூடியவர் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு கோடி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தேவைப்படக் கூடிய அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் திட்டமாக மா.சுப்பிரமணியன் மாற்றிக்காட்டுவார்.
அதுபோன்று பள்ளிக் கல்வித் துறையை இந்தியாவிலேயே சிறந்த துறையாக மாற்ற நித்தமும் உழைத்துக்கொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அமைச்சரவைக்குப் புதிதாக வருகைதந்துள்ளார் உதயநிதி. அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
உதயநிதி மீது நம்பிக்கை இருக்கிறது
அமைச்சராகப் பொறுப்பேற்ற போது விமர்சனம் வந்தது. வரத்தான் செய்யும். சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற போதும் விமர்சனம் வந்தது.
ஆனால் தன்னுடைய செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்று நிரூபித்துக் காட்டினார். அதுபோன்று அமைச்சரான சமயத்தில் விமர்சனம் வந்தபோது என் செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பின் விமர்சியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத்திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன்கள் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக் கூடிய துறைகள். அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநில இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கக் கூடிய வகையில் தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தேன்.
அதன்படி திருச்சியின் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். நமது தமிழக இளைஞர்கள் உலகத்தோடு போட்டியிட வேண்டும். அதற்கான வீரர்களை உருவாக்க வேண்டும்.
இது அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல இம்மாவட்ட அமைச்சர்களான நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் மகிழ்ச்சித் தரக் கூடிய அறிவிப்புதான்” என்று கூறினார்.
பிரியா
ரகசியமாக செயல்படுகிறதா பிஎஃப்ஐ: 56 இடங்களில் என்ஐஏ அதிரடி!
ஜனவரி முதல் வாட்சப் சேவை நிறுத்தப்படும் போன்களின் லிஸ்ட் இதோ!