தனது வாழ்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் தான் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டன்ஸி பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியிலேயே இலங்கையை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலங்கையை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சொதப்பலான பந்துவீச்சால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
முதல் போட்டியின் வெற்றியைப் புகழ்ந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இரண்டாவது போட்டியின் தோல்வியையும் ஹர்திக் பாண்டியாவின் கேட்டன்ஸியையும் விமர்சித்தனர்.
இருந்தாலும் தொடரைக் கைப்பற்றியே தீருவோம் என்ற முனைப்போடு 3வது டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.
போட்டிக்குப் பிறகு பேட்டி அளித்த ஹர்திக் பாண்டியா, “இந்த நேரத்தில் என்னுடைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எனது கிரிக்கெட் பயணத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்.
அவர் என் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். நானும் அவரும் வேறு நபராக இருந்தாலும், கிரிக்கெட்டை பற்றிய எங்களுடைய எண்ணங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அவருடன் நான் சிலகாலம் இருந்ததால் எனது தலைமை பொறுப்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. அதுதான் நான் எதை அடைய வேண்டுமோ, அதற்காக எனக்கு உதவி செய்தது. விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வை நெஹ்ராவிடம் தான் கற்றுக் கொண்டேன்.
எந்த ஒரு ஜூனியர் கிரிக்கெட் அணியையும் நான் வழி நடத்தியது கிடையாது. 16 வயதுக்கு உட்பட்ட பரோடா அணிக்கு முன்பு ஒருமுறை கேப்டனாக செயல்பட்டேன்.
அதற்குப் பின்னர் என்னுடைய ஆட்டத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள். அதிலிருந்து நான் எந்த ஒரு அணிக்கும் கேப்டனாக பொறுப்பு வகித்ததில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து ஜனவரி 10 ஆம் தொடங்கவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படவுள்ளார்.
மோனிஷா
துணிவு, வாரிசு: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிக்கெட் விலை!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே… மெயில் ஐ.டி. இருக்கா?