தமிழகத்தில் களைகட்டிய ஆடிப்பெருக்கு… ஆற்றில் இறங்கி வழிபட்ட பக்தர்கள்!

தமிழகம்

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும், குறிப்பாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் நீர்நிலைகளில் நீராடி, வழிபட்டு வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று எச்சரிக்கை காரணமாக ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாட மக்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதலே ஆடிப்பெருக்கு வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன?

ஆடிப் பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பதினெட்டு என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் ஆடி மாதம் 18ம் நாளை குறிக்கிறது. நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடி 18.

தென்மேற்கு பருவ காலத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். புதுப்புனல் பொங்கி வருவதை ஆற்றுப்பெருக்கு என்றும் அழைக்கிறோம். விவசாயத்திற்கு அடிப்படை தேவையான தண்ணீர் வரத்துக்கு அடிப்படையான மழைக்காலத்தில், சிறப்பு வாய்ந்த ஆடி 18ம் நாளை விவசாயிகள் கொண்டாடுகின்றனர். ஆடி 18ம் நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய வசதியாக இருக்கும்.

ஆற்றங்கரை அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்நாளில் மக்கள் அருகே இருக்க கூடிய ஆறு, குளம் என இயற்கையான நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவார்கள். திருமணமான பெண்கள் தங்கள் தாலிச்சரடை மாற்றுவார்கள்.

தமிழகத்தில் கொண்டாட்டம்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட்டு வரும் ஆடிப்பெருக்கு விழா காரணமாக தமிழகம் முழுவதும் ஆற்றங்கரையோரம் மக்கள் குவிந்துள்ளனர். குடும்பத்துடன் அங்கு சென்று நீர் நிலைகளில் நீராடி, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருச்சி, சேலம், கரூர், திருப்பத்தூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியுள்ளது. மேலும் புதுமண தம்பதியினர் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், திருமணமான பெண்கள் புதிய தாலிகளை மாற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் குளிக்க தடை!

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து சேலம், திருச்சி, கரூர், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஏராளமாக கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் பாதுக்காப்பிற்காக காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு துறை சார்பில் மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழா விடுமுறை!

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனதருமை மாணவச் செல்வங்களே!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *