திராவிட இந்தியா: சேஷைய்யங்கார் சொல்வதையாவது கேட்பாரா ஆளுநர்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கடி அரசியல்வாதிகளையும் மிஞ்சும் வகையில் பல கருத்தியல் சார்ந்த விஷயங்களைப் பேசுவார். அவரது அதிரடி கூற்றுக்கள் அனைவராலும் பரபரப்பாக விவாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி ஏதாவது நெருக்கடியைச் சந்திக்கும் நேரங்களில் ஆளுநர் அதிரடி கருத்துகளைக் கூறுவார் என்று சொன்னார் ஒரு நண்பர்.

சென்ற வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கட்சியில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அதற்காகவெல்லாம் ஆளுநர் இப்படி கருத்து வெடிகளை வீசுவார் என்று நம்ப முடியவில்லை.

கடந்த சில நாட்களாக ஆளுநர் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே பொருத்தம் என்று கூறி, அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெயரை அவமதித்துள்ளார். அது பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு என்ற பெயர் எப்படி பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பலரும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

மாநில சட்டமன்றத்தால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டு கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இருந்து வரும் பெயரை எதற்காக பிரச்சினைக்கு உள்ளாக்குகிறார் என்பது ஒருவருக்கும் விளங்கவில்லை.

ஆனால், இது மட்டுமே பிரச்சினையல்ல. கடந்த புதன்கிழமை காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொண்ட தன்னார்வலர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஆளுநர் மாளிகையில் நடந்துள்ளது. அதில் பேசிய ஆளுநர் தமிழக அரசியல் பிற்போக்குத்தனமாக உள்ளது என்று கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கூறுகிறது.

அது என்ன பிற்போக்கு என்றால் “நாங்களெல்லாம் திராவிடர்கள்” என்று கூறுவதுதான் பிற்போக்காம். பாரதம் என்ற ஓர் அடையாளமே எல்லோருக்கும் பொதுவானது. அது காலம், காலமாக இருப்பது. பிரிட்டிஷ்காரர்கள்தான் திராவிடர் என்று தனித்த அடையாளம் இருப்பதாக கதைகட்டிவிட்டார்கள்; பிரித்தாளும் சூழ்ச்சி செய்தார்கள். அதை தமிழ்நாட்டில் அனைவரும் பேசி வருகிறார்கள் என்றெல்லாம் விமர்சித்துள்ளார் ஆளுநர்.

சரி, அதனால் என்ன பிரச்சினை என்றால் அதையும் அவர் தெளிவாகக் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கூறுகிறது. இந்த திராவிடர் என்ற “கட்டுக்கதையின்” பலனாக, இங்கே கூட்டாட்சி பற்றி வெளிப்படையாக அதிகம் பேசப்படுகிறதாம். இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் அரசியல் சட்ட அடிப்படையில் ஒருங்கிணைந்துள்ளதாகப் பேசுவது தவறாம். அவை நிர்வாகத்துக்காக பிரிக்கப்பட்டவை மட்டுமே என்று கூறியுள்ளார்.

சுருங்கச் சொன்னால் மாநில உரிமைகள் குறித்து பேசக்கூடாது, “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற சுயமரியாதைக் குரல் கூடாது. ஒன்றிய அரசே  நாட்டின் ஒற்றை அரசு. அதன் கருத்துகளுக்கு மாறாக எதுவும் கூறக்கூடாது என்பதையே ஆளுநர் வலியுறுத்துகிறார். அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களில் ஆட்சி செய்வதையே அரசு (State) என்று சொல்வதை மறுதலிப்பதுபோல பேசுகிறார்.

இவ்வாறு மாநில சுயாட்சி குறித்த பேச்சு, கூட்டாட்சி குறித்த தெளிவு ஆகியவற்றுக்கெல்லாம் திராவிட அடையாளம் குறித்த தன்னுணர்வு காரணம் என்று அவர்  நினைக்கிறார். அதனால்தான் திராவிடர்கள் என்று யாரும் கிடையாது; அது ஒரு புவியியல் அடையாளம் மட்டுமே என்று கூறுகிறார்.

அரசியலுக்காக வரலாற்றை மாற்ற முடியுமா?

ஆரியர்கள், திராவிடர்கள் என்ற வேறுபட்ட மனித குழுக்களைக் குறித்து நவீன காலத்தில் தொடக்கத்தில் எழுதியது, பேசியது, ஆதாரங்களைத் தொகுத்தது எல்லாம் ஐரோப்பியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்றாலும் அதெல்லாம் கட்டுக்கதை என்று யாரும் புறந்தள்ள முடியாது.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் பகை இருந்ததா, அந்த இனங்கள் எப்படி எவ்வளவு தூரம் எந்தக் காலகட்டத்தில் ஒன்று கலந்தன என்பன குறித்து பல்வேறு யூகங்களும், ஆய்வுகளும் உள்ளன. ஆனால் தொடக்கத்தில் இவ்வாறான இருவேறு மனிதக் கூட்டங்கள் இருந்தன, பண்பாடுகள் இருந்தன என்பதை யாருமே மறுக்க முடியாது என்பதுதான் உண்மை.

மேலும் ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக சொன்னார்கள், அதை திராவிட இயக்கம் எடுத்துக்கொண்டு பிரிவினை பேசியது என்று யாரேனும் சொன்னால் அது மிகுந்த நகைப்புக்குரியது.

திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை, சமஸ்கிருதம் பேசியவர்கள் ஆரியர்கள் என்றால், திராவிட மொழிகளை பேசியவர்கள் ஆரியர்கள் அல்லாத மக்கள், திராவிடர்கள் என்பதை எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களும், சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

 ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட சுவாமி விவேகானந்தரே கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? விவேகானந்தர் எதற்காக பிரித்தாளும் சூழ்ச்சி செய்யப் போகிறார்? அவர் அமெரிக்கா சென்றபோது 1900ஆம் ஆண்டு ஓக்லாந்தில் என்ன பேசினார் என்பதைக் காண்போம். அவர் கூறுகிறார்,

“வட இந்தியர்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்; அதே நேரம் தென்னிந்தியர்கள் பேசும் மொழிகளோ, வட இந்தியர்கள் பேசும் மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை; அவர்களுக்குள் எந்த உறவும் கிடையாது. வட இந்திய மக்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள்; பாஸ்க், பிரின்னீஸ், ஃபின்ஸ் தவிர அனைத்து ஐரோப்பியர்களும் அதே ஆரிய இனத்தவர்களே; தென்னிந்தியர்களோவெனில் பண்டைய எகிப்தியர்களும், செமிடிக் மக்களும் உருவான இனத்தினை சேர்ந்தவர்கள்.”

விவேகானந்தரே தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறானவை; அதனால் தென்னிந்தியர்கள் ஆரியர்கள் அல்லர், வேறு இனத்தவர்கள் என்று கூறுகிறார் என்றால் எந்த அளவு அது அனைவரது கருத்தாகவும் இருந்துள்ளது என்பது புலனாகும்.

இதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போதுதான் திராவிட மொழிகளின் தொன்மை குறித்தும், தனித்துவம் குறித்தும் பலரும் ஆராயவும், எழுதவும் செய்தார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமென்றால் சேஷைய்யங்காரின் நூலினைக் கூறலாம்.

சேஷைய்யங்காரின் திராவிட இந்தியா!

டி.ஆர்.சேஷைய்யங்கார் ஒரு வரலாற்றுப் பேராசிரியர். அவர் பெயரே தெளிவுபடுத்துவதன்படி பார்ப்பனர்.  பச்சையப்பன் கல்லூரியில் பணி புரிந்துள்ளார். Member of Royal Asiatic Society of Great Britain & Ireland, Fellow of Royal Historical Society, London என்று நூலில் கூறப்பட்டுள்ளது. அவர் 1925ஆம் ஆண்டு Dravidian India என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த  நூல் Internet Archive என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. தமிழில் இந்த நூலை கல்வியியலாளர் க.ப.அறவாணன் மொழியாக்கம் செய்து “திராவிட இந்தியா” என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

சேஷைய்யங்கார் நூல் அசுட்டோஷ் முகர்ஜி என்ற கல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியருக்கு அவர் படித்து ஒப்புதல் அளித்தபின் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நூலுக்கு ராமலிங்க ரெட்டி என்ற தெலுங்கர், மைசூரில் கல்வித்துறை இயக்குநராக பணியாற்றியவர், முகவுரை அளித்துள்ளார். எதற்காக இதையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால் இது மறைவாய், பழங்கதையாய் எழுதப்பட்டதல்ல. ஓர் ஆய்வாக, அறிவுச் செயல்பாடாக பலர் ஒப்புதலுடன் எழுதப்பட்டுள்ளது.

இந்த நூலின் நோக்கமாக ராமலிங்க ரெட்டி என்ன கூறுகிறார் என்றால், “திராவிடர்களுக்கு பெருமிதம் அளிக்கும்படி ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமான கொடுக்கல் வாங்கல் என்பது பரஸ்பரமானது என்பது எடுத்துக்காட்டப் படவேண்டும். சில அம்சங்கள் அவர்களிடமிருந்து பெறப்பட்டது என்றால்; சில அம்சங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது; இந்து பண்பாடென்பது இருவரது பண்பாடுகளின் தொகுப்பு” என்று கூறுகிறார்.  

இந்த நூல் நான்கு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று இந்து இதிகாசங்களில் திராவிடர் குறித்த சித்தரிப்பு; இரண்டு திராவிடர்களின் தோற்றம்; மூன்று திராவிடர்களின் உன்னதம்; நான்காவது பண்டைக்கால தென்னிந்திய அரசமைப்பு.  

சேஷைய்யங்கார் இந்த நூலில் கூறும் பல கருத்துகளும் பல்வேறு ஆய்வாளர்களின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டவை. விரிவான மேற்கோள்களின் அடிப்படையிலேயே தன் வாதங்களை வைக்கிறார்.  ரகோசின், ஸ்லேட்டர் என்று  நீண்ட வரிசையில் ஆய்வாளர்களை அவர் எடுத்தாளுகிறார். அறிஞர் அண்ணாவும் தன் ஆரிய மாயையில் இந்த ஆய்வாளர்களின் நீண்ட பட்டியல் ஒன்றை தந்திருப்பார்.

திராவிட இந்தியா நூலின் நோக்கம்

திராவிட இந்தியா நூலின் நோக்கம், சேஷைய்யங்காரின் நோக்கம்  நிச்சயம் இந்தியாவைப் பிளவுபடுத்துவதல்ல. மாறாக ஆரியர்களைவிட அல்லது அதற்கு இணையாக தொன்மையானது திராவிட பண்பாடு என்றும், இரண்டு பண்பாடுகளும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை நிறுவுவதும் ஆகும். அதனால் திராவிட பண்பாட்டின் செழுமையை, தொன்மையை அங்கீகரிப்பது அவசியம் என்று கருதுகிறார்.

அவர் சமஸ்கிருதம் திராவிட மொழிகளிலிருந்து தாக்கம் பெற்றுள்ளது என்பதை நிறுவுகிறார். ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தபோது இங்கிருந்து திராவிடர்களின் மொழிகளிலிருந்து நிறைய பெற்றுக்கொண்டார்கள் என்கிறார். வட நாட்டிலும்  ஆரியர்கள் குடியேறியபோது திராவிடர்களே வசித்து வந்தார்கள் என்று கூறுகிறார். அவர்கள் ஆரியர்களுடன் கலந்துவிட்டார்கள் என்கிறார்.

தமிழ்நாட்டிலும்  சங்க காலத்திலேயே அந்தணர்கள் வசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று கூறுகிறார். ஆனால், வர்ண தர்ம கோட்பாடும், சூத்திரர்கள் என்ற வகைப்பாடும் ஆரியர்கள் உருவாக்கியவை, அவை திராவிட பண்பாட்டில் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

சேஷைய்யங்கார் பார்வையில் சமகால முக்கியத்துவம்

இதையெல்லாம் மட்டும் அவர் கூறவில்லை. திராவிட தென்னிந்திய சமூகத்தின் அரசியல் அமைப்பை விவாதிக்கும் அவர் இறுதியாக முத்தாய்ப்பான கருத்தொன்றையும் கூறுகிறார். திராவிடர்களின் மேதைமை சமகாலத்தில் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளைப் பெற வழிகாட்டும் என்றும் கூறுகிறார். அது திராவிடத்தின் தொன்மையான வரலாற்றின் பெருமைக்கு நியாயம் செய்யும் என்றும் கூறுகிறார்.

இது போன்ற ஒரு ஆரோக்கியமான பார்வை ஏன் ஆளுநருக்கு சாத்தியமாகவில்லை? தமிழ்நாடு எந்த வகையில் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை? ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்க வேண்டும், ஜாதீய ஒடுக்குமுறையும், ஆணாதிக்க ஒடுக்குமுறையும் ஒழிய வேண்டும் என்றுதானே பெரியார் பாடுபட்டார்?

சமூக நல அரசு அமைய வேண்டும் என்றுதானே திராவிட முன்னேற்றக் கழகம் கூறியது? அது வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததுடன், இந்திரா காந்தி அதை செயல்படுத்தியபோது ஆதரவு அளிக்கவில்லையா?

அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் வளர்ச்சி, நிர்வாகம், தேசப் பாதுகாப்பு என அனைத்து தளங்களிலும் கடந்த எழுபதாண்டுகளில் தமிழகம் மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளது. அந்த எழுபதாண்டுகளில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் திராவிட இயக்க ஆட்சிதான்.

திராவிட முன்னேற்றக் கழகம் வாஜ்பேயி தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவையில் பொறுப்பேற்றதிலிருந்து பதினைந்து ஆண்டுகள் மத்திய அரசின் அங்கமாக விளங்கியுள்ளது. எங்கேயிருக்கிறது பிரிவினை நோக்கு இதிலெல்லாம்?

பாரதீய ஜனதா கட்சியின், ஆர்எஸ்எஸ்ஸின் பிற்போக்கு அரசியலுக்கு உடன்படாமல் இருப்பதை ஏதோ தேச நலனுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் திரித்துக் கூறுவதை எளிதில் அனைவரும் புரிந்துகொள்வார்கள். அந்த ஆரிய மேன்மைவாத அரசியலுக்கு மட்டும்தான் திராவிடம் என்ற சொல் கசக்கும். தமிழ்நாடு என்ற சொல் உறுத்தும். மற்றபடி இந்திய நலனில் அக்கறை கொண்ட யாரும், சேஷைய்யங்கார் போன்றவர்கள், திராவிடத்தைக் கண்டும், தமிழுணர்வைக் கண்டும் அஞ்ச மாட்டார்கள். போற்றுவார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

difference between democracy and monarchy by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கார் விற்பனை:  ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்த பிரபல நடிகர்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *